மாணவியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்குதல்: காவல் நிலையம் முற்றுகை
சிதம்பரத்தில் மாணவியை கேலி செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததை தட்டிக்கேட்ட, அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, குற்றவாளிகளை எஸ்சி., எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
சிதம்பரத்தில் மாணவியை கேலி செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததை தட்டிக்கேட்ட, அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, குற்றவாளிகளை எஸ்சி., எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டப்பட்டினத்திலிருந்து சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை காலை அரசு பேருந்து வந்தது. அப்போது பெராம்பட்டு பஸ்நிறுத்தத்தில் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் டி.சுகன்யா, சங்கரி, புவனேஸ்வரி உள்ளிட்ட மாணவியர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது படியில் வழிவிடால் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கெளதமன், ராஜேந்திரன், ராஜா உள்ளிட்ட 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கெளதமான சுகன்யா என்ற மாணவியை கையை பிடித்து இழுந்து உள்ளே செல் என்றும், ராஜேந்திரன் மாணவியின் இடுப்பில் கை வைது தள்ளியதாக கூறப்படுகிறது. இதனை சுகன்யாவின் அண்ணன் செல்வமணி தட்டிக்கேட்டுள்ளார்.
இந்நிலையில் சிதம்பரம் காந்திசிலை அருகே பேருந்து வந்து நின்ற போது, கெளதமன், ராஜேந்திரன், ராஜா உள்ளிட்ட 4 பேரும் சாதி பெயரை சொல்லி திட்டி மாணவி சுகன்யாவின் அண்ணன் செல்வமணியை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி சுகன்யா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விரைந்து சென்று கெளதமன், ராஜேந்திரனை கைது செய்தனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு மற்றும் நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவியை கேலி செய்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்தும், அதனை தட்டிக்கேட்டை தலித் இளைஞரை தாக்கியவர்களை எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.
பின்னர் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் அவர்களை சமரசப்படுத்தி 4 பேர் மீது எஸ்சி., எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கெளதமன், ராஜேந்திரன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.