முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி நகராட்சி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுகவினர் ரகளை:  இரு தரப்பிலும் தர்ணா

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் எம்ஜிஆர் சிலை வைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே நடைபெற்ற தகராறில் சேர்கள் தள்ளிவிடப்பட்டது.  இருதரப்பிலும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:35 AM
பகிர்:

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் எம்ஜிஆர் சிலை வைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே நடைபெற்ற தகராறில் சேர்கள் தள்ளிவிடப்பட்டது.  இருதரப்பிலும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் திங்கள்கிழமை நகராட்சி பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்றது.  கூட்டத்துக்கு திமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் முருகானந்தம், ஆணையர்(பொறுப்பு) நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் பேருந்து நிலையம் அருகே மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் சிலை வைப்பது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக மனு கொடுத்தும் அதை மன்ற தீர்மானத்துக்கு கொண்டு வராதது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில்  நகர்மன்ற தலைவரின் மேஜை, இருக்கை, மைக் ஆகியன கீழே விழுந்தது. 

இதைத் தொடர்ந்து திமுக தலைவரான வேலுமணி அதிமுக கவுன்சிலர் புவனேஷ் என்பவரை சஸ்பெண்ட் செய்தும், கூட்டத்தை ஒத்திவைத்து விட்டும் வெளியேறினார். நகர்மன்ற தலைவர் வேலுமணி கூறுகையில், நகரின் வளர்ச்சிப்பணிகள் மன்ற நடவடிக்கையால் தொடர்ந்து தடைபட்டு வருகிறது.  எம்ஜிஆர் சிலை வைப்பது குறித்த விபரங்களுடன் முறையாக மனு வழங்குமாறு தெரிவித்தும், இதுவரை தரவில்லை.  பழனி சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் செயல்படுகின்றனர்.  கவுன்சிலர் புவனேஷ்வரனை மூன்று கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளேன். என்றார். 

இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையில், திமுக தலைவர் தன்னிச்சையாக கூட்டம் நடத்தி ஆல்பாஸ் என பதிவு செய்வதாகவும்,  கவுன்சிலர்களால் எதிர்க்கப்படும் பணி செய்யாத ஒப்பந்தகாரருக்கே கோடிக்கணக்கில் பணிகள் வழங்குவதாகவும், எழுது பொருட்களுக்கு மாதம் ஐம்பதாயிரம் செலவுகணக்கு தருவதாகவும் தெரிவித்து அவர்மீது நடவடிக்கை கோரி நகராட்சி அலுவலக வாயில்முன் தர்ணாவில் ஈடுபட்டனர். 

நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் கூறுகையில், அனைத்து வார்டுக்கும் சட்டமன்ற உறுப்பினர் நிதி பகிர்ந்து தரப்படுகிறது.  திமுக தலைவர் என்பதால் அதிமுக கவுன்சிலர்கள் வார்டுக்கு எந்த பணியும் செய்ய விடுவதில்லை. எம்ஜிஆர் சிலை வைக்க பலமுறை மனு கொடுத்துவிட்டோம். வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என தெரிவித்தார்.  இச்சம்பவத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மாரியப்பன், ஆணையர்(பொறுப்பு) விமலா ஆகியோர் இருதரப்பினரிடையேயும் பேசி முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து இருதரப்பிலும் தர்ணா விலக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுகவினர் தாக்கியதாக கவுன்சிலர் புவனேஷ்வரன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அவரை எம்எல்ஏ., வேணுகோபாலு மற்றும் கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், பழனி டவுன் போலீஸார் இருதரப்பிலும் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.