இந்திய-இலங்கை மீனவர்கள் கூட்டுக் குழுக் கூட்டம்: புதுவையை மோடி அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய-இலங்கை மீனவர்கள் கூட்டுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புதுவையை நரேந்திர மோடி அரசு புறக்கணித்து விட்டது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாநில செய்தித்
இந்திய-இலங்கை மீனவர்கள் கூட்டுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புதுவையை நரேந்திர மோடி அரசு புறக்கணித்து விட்டது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.வி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை, இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும் கூட்டுக்குழுக் கூட்டத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு, புதுவை மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய பிரதிநித்துவத்தை அளிக்காமல் புறக்கணித்துள்ளது.இக்கூட்டுக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் கேஏ.ஜெயபால், மீன்வளத்துறை செயலர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ், ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பங்கேற்று தமிழக மீனவர்கள் அடையும் பாதிப்பு, பரந்த அளவிலான மீன்பிடி உரிமை குறித்து பதிவு செய்து விவாதிக்கின்றனர்.
ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்துக்கு புதுவை மாநிலத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் மோடி அரசு புறக்கணித்துள்ளது. இலங்கை ராணுவம் அடிக்கடி புதுவை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை தாக்கி, கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்வது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில் புதுவை மாநில மீன்வளத்துறை அமைச்சர், செயலாளர், இயக்குநர் ஆகியோர் தில்லிக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்று புதுவை-காரைக்கால் மீனவர்கள் படும் பாதிப்புகளை பதிவு செய்திருக்க வேண்டும். நமது மாநில உரிமையை நிலைநாட்டி இருக்க வேண்டும். இதைச் செய்ய மாநில அரசு தவறி விட்டது. ஒட்டுமொத்த புதுவை மீனவர்களையும் மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறதா. பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ், முதல்வர் ரங்கசாமியின் நிலைப்பாடு என்ன.
ஒருக்கால் மத்திய அரசே புதுவை மீனவர் பிரச்னையில் அலட்சியம் காண்பித்து இருந்தாலும், புதுவை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. ராதாகிருஷ்ணன், மத்திய வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சர்களை சந்தித்து உயர்நிலைக் கூட்டத்தில் புதுவையின் பங்கேற்பை உறுதிப்படுத்தி இருக்கவேண்டும். தனது கடமையை செய்யாமல் உள்ளார். புதுவை மாநில பா.ஜ.க. இப்பிரச்னையில் என்ன பதில் கூறப்போகிறது என்றார் வீரராகவன்.