சேர்வலாறு அணையில் 1,500 கனஅடி உபரிநீர் திறப்பு: தாமிரவருணி வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 151.08 அடியை எட்டியை எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி உபரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 151.08 அடியை எட்டியை எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருகின்றன. 156 அடி கொள்ளளவை கொண்ட சேர்வலாறு அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 143 அடி கொள்ளளவை கொண்ட பாபநாசம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 14, பாபநாசம் கீழ் அணை 3, சேர்வலாறு அணை 11, மணிமுத்தாறு அணை 3.2, கருப்பாநதி அணை 1, குண்டாறு அணை 1.1, அடவிநயினார் அணை 1, திருநெல்வேலி 0.04, பாளையங்கோட்டை 4, களக்காடு 5.8, அம்பாசமுத்திரம் 3.2, கன்னடியன் அணைக்கட்டு 3, நான்குனேரி 1.5, ராதாபுரம் 1, செங்கோட்டை 1, தென்காசி 1.2, ஆலங்குளம் 4. திங்கள்கிழமையும் இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்பட பரவலாக மிதமான மழை பெய்தது.
1,500 கனஅடி திறப்பு:
சேர்வலாறு அணையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 150 அடிக்கு மேல் நீரை சேமித்து வைக்க முடியாததால் உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படியில் அணையில் இருந்து 1,500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. அணையின் நீர்மட்டம் 151.08 அடியாக இருந்தது. உபரி நீர் ஆற்றில் திறக்கப்படுவதாலும், பரவலாக மழை நீடித்து வருவதாலும் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,300 கனஅடி நீர்வரத்து இருந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 212 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அருவிகளில் வெள்ளம்:
நீர்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமையும் வெள்ளம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை. பாபநாசம் பாணதீர்த்த அருவியில் தொடர்ந்து வெள்ளம் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.அணைகள் கண்காணிப்பு: தொடர்ந்து பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான சேர்வலாறு அணை நிரம்பியது. பாபநாசம் அணை நிரம்பி வருகிறது. நிரம்பும் நிலையில் இருப்பதால் பாபநாசம் அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அணைகளில் மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.