முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே அனுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

சாத்தூர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.  

Updated On : 2 டிசம்பர், 2014 at 10:04 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:04 PM

சாத்தூர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.  

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே எட்டக்காபட்டி கிராமத்தில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்பிரபு(30), ஞானசேகரன்(40) சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு 3 தகர கொட்டைகைகளில், ஒரு அறையில் வழக்கம் போல் செவ்வாய்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில், மாலையில் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரித்ததை ஓரப்பகுதியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட உராய்வினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த எட்டக்காபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(35), சரவணன்(30), பெருமாள்சாமி(35), ராஜேஷ்கண்ணன்(35), ரெங்கசமுத்திரபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(37), உரிமையாளர்களான வெங்கடேஷ்பிரபு, ஞானசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, அருகில் இருந்த தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் உடனே ஆலங்குளம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சிவகாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்தால் மேலும் தீ பரவும் தன்மையுடைய வேதிபொருள் என்பதால் ஈரமண் போட்டு தீயை போராடி அடுத்த அறைகளுக்கு பரவாமல் அணைத்தனர். பின்னர் காயமடைந்தவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு ஆம்புலன்சில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தற்போது சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

எஸ்.பி.ஆய்வு: சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் காவல் துறையினருடன் விரைந்து சென்று விபத்துக்குள்ளான தகர கொட்டைகளை பார்வையிட்டார். மேலும் அவர் கூறுகையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் விசாரணை செய்ததில் அலுமினிய பவுடர் தொழிற்சாலைக்கு கடந்த 6 மாதங்களு்ககு முன்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும், இது தொடர்பாக விபத்துக்கான காரணம் குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் மதியழகன், சாத்தூர் காவல் கண்காணிப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.