சட்டப் பேரவை தேர்தலில் பாமக தலைமை ஏற்றால் பாஜக கூட்டணி தொடரும்:ராமதாஸ்
கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அங்குள்ள மக்களின் செல்வாக்கு சரியும்போதெல்லாம் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் எனக் கூறிவருகின்றனர். கடந்த 2008-இல் இது
வருகிற 2016-இல் நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணித் தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரியில் பாமக மாவட்ட பொதுக்குழு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அங்குள்ள மக்களின் செல்வாக்கு சரியும்போதெல்லாம் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் எனக் கூறிவருகின்றனர். கடந்த 2008-இல் இது போல கூறி பாஜக தலைவர் எடியூரப்பா ஒகேனக்கல் எல்லைக்கு வந்தார். பின்னர், அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது.அவர்கள் ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று சொன்னால், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதி எங்களுக்கு சொந்தம் என சொல்ல வேண்டிய நிலைவரும். எனவே, பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் இது போல பேசுவதை தவிர்க்க வேண்டும்.
தேசிய அளவில் மதுக்கொள்கை அமல்படுத்த வேண்டும். அண்மையில் வானொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மது இளைஞர்களை பேரழிவுக்கு அழைத்து செல்கிறது. மது இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். அவருக்கு பாமக பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், இது வெற்று வார்த்தையாக இருக்கக் கூடாது. அதனை செயல்படுத்த வேண்டும்.
வருகிற தேர்தலில் மது, ஊழல் ஆகியற்றிற்கு எதிராக எங்களது பிரசாரம் இருக்கும். தருமபுரி-மொரப்பூர் ரயில்பாதை திட்டம் வருகிற ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை அளிக்கிறது. இதற்கு பெண்களின் திருமண வயது, வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை காரணங்களாகும். எனவே, பெண்ணின் திருமண வயதை 21- ஆக உயர்த்த வேண்டும். அதேபோல, கருவுற்ற பெண்களுக்கு சத்தாண உணவு அவர்களது சொந்த வீடுகளுக்கு சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயம், நுரையீரல், சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளை தொடங்கி மேம்படுத்த வேண்டும். தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பயனில்லாத திட்டமாக மாறிவிட்டது. அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. எனவே, இந்த திட்டத்தில் குறைகளை களைந்து அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்கின்றனர். இந்த மாற்றத்தை பாமக அளிக்கும். எனவே, வருகிற சட்டப் பேரவை தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி போட்டியிடும். எங்களது தலைமையை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணித் தொடரும் என்றார் ராமதாஸ்.
இதில், தருமபுரி மக்களை தொகுதி முன்னாள் உறுப்பினர்கள் ரா.செந்தில், பாரிமோகன், மாநில துணைப் பொதுச் செயலர் அ.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் வெங்கடேசுவரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.