அரவிந்தர் ஆசிரமத்தில் வசிக்கும் பெண்கள் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு
புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தில் ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீபிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீபிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி உள்ளனர்.
புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து தங்களை வெளியேற்றுவதை தடுக்க பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தில் ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீபிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீபிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஹேமலதா பிரசாத்தின் மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி மேற்கொண்ட விசாரணையில் ஹேமலதா பிரசாத் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிந்தது. இதையடுத்து ஹேமலதாவின் செயல்பாட்டால் ஆசிரமத்தின் உயர்ந்த நோக்கங்கள் சிதைந்துபோகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் ஹேமலதா தரப்பினர் விசாரணை அதிகாரியின் அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. காலி செய்யும்வரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.இதற்கிடையே குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் இருந்து 5 சகோதரிகளையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் இன்று நடவடிக்கை எடுத்தது. இதைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹேமலதா என்பவர் 4 மாடிக்கட்டடத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். போலீஸார் அவரை மீட்க மேலே ஏறினர். அப்போது 4 சகோதரிகளும் வேறு கட்டடத்தில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டினர். இதனால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
2 மணி நேரம் இப்போராட்டம் நீடித்த நிலையில் பெரியகடை காவல்நிலைய எஸ்.ஐ. சஜீத் டிவி நிருபர் போல் நடித்து ஹேமலதாவை பேட்டி எடுப்பதாகக் கூறி மேலே சென்று அவரை மீட்டார். பின்னர் 5 சகோதரிகளையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் ஆசிரம பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.