18 வயதில் இருந்து என்னோடு பிரியாமல் இருப்பவர் அன்பழகன் என்று திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொருவரும் “மணி விழா” என்ற பெயரால், தங்களின் அகவை 60 முடிகின்ற போது விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் எனக்கும், கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியருக்கும் நட்பு முகிழ்த்ததற்கே ஒரு மணி விழா கொண்டாட வேண்டும்.
1942 ஆம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள பேரறிஞர் அண்ணா வந்தபோது, அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.
இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா அவர்கள் எழுந்து, “நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்” என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார்.
அந்த இளைஞர் தான் இன்று 93வது பிறந்த நாள் காணும் பேராசிரியர் அன்பழகனார். முதன் முதலாக அங்கே தான் நான் பேராசிரியரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது எங்களிடையே முகிழ்த்த நட்பு தான், எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றுக்கிடையே “மணிவிழா” கண்டு அதற்கு மேலும் இரண்டாண்டுகள் கடந்து, அவருக்கு நானும், எனக்கு அவரும், இருவரும் சேர்ந்து நம்முடைய கழகத்திற்கு துணையாகவும் இருந்து நடத்தி வருகிறோம்.
விழுந்து விட்ட ஆலமரங்கள் போக, எஞ்சியிருக்கும் இரண்டு “ஆலமரங்களாக”, எங்களைச் சுற்றிவேர் விட்டுள்ள விழுதுகளின் துணையோடு இந்த இயக்கத்தைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நான் பதினெட்டு வயது இளைஞனாக “மாணவ நேசன்” என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டிருந்த போது “தமிழ் மாணவர் மன்றம்” என்ற ஓர் அமைப்பை உருவாக்கி நடத்த முற்பட்டேன். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942 ஆம் ஆண்டு திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. கண்களிலே நீர் பெருக கலங்கி நான் நின்று கொண்டிருந்த போது தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இன்றைய பேராசிரியர், அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்.
எனக்குத் துணையாக 1942 ஆம் ஆண்டு அங்கே பேராசிரியர் வந்த போது என்னுடைய வயது 18. அப்போது என் துணைக்கு வந்த பேராசிரியர், இன்று 93வது வயதில் அடியெடுத்து வைக்கின்ற நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கின்றார் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார்.
நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர் தான் நம்முடைய இனமானப் பேராசிரியர். மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் – மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக் கூறி மாத்தமிழ் காக்கும் அரிமா பெரியாரின் பெரும் தொண்டர் அண்ணாவின் அன்புத் தம்பி எனது உயிரனைய உடன்பிறப்பு தான் இனமானப் பேராசிரியர். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர்.
சாதி மதப் பேதங்களில் சிக்கித் தவித்த இந்தச் சமுதாயத்தை தலை நிமிரச் செய்ய வேண்டுமென்பதற்காக அவரது பேச்சும், எழுத்தும் பயன் பட்டது என்றால் அது மிகையல்ல.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும், கனிவான சொல்லழுகும், தமிழ்க் கட்டழுகும் மேடையில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம் பலமுறை.
பேராசிரியரைப் பற்றி ஒருமுறை நான் கூறும் போது, “நான் மக்களுக்காக எழுதுகிறேன், பேராசிரியர் அன்பழகன் அவர்களோ என் போன்றோருக்காக எழுதுகிறார்” என்று சொன்னேன். அத்தகைய அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர் பேராசிரியர்.
பேராசிரியருக்கு 93வது பிறந்த நாள் தமிழுக்கு முடி சூட்டுகின்ற நாள் தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் திராவிட மக்கள் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழர்களின் வெற்றிக்காக, உரிமைக்காகக் குரல் கொடுப்போம் என்று சூளுரைக்கின்ற நாள் இந்த நாள் என்றுகூறி, மேலும் பல்லாண்டுகள் பேராசிரியப் பெருந்தகையே, கழகம் வாழ, நீ வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.