பழனி கோயிலில் கேரள பக்தர்கள் கூட்டம்
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழா, அரையாண்டு தேர்வு விடுமுறை உள்ளிட்டவற்றால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய
பழனி மலைக்கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழா, அரையாண்டு தேர்வு விடுமுறை உள்ளிட்டவற்றால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழனி மலைக்கோயிலில் பொது தரிசன வரிசை, கட்டண வரிசைகளிலும், ரோப்கார், வின்ச் நிலையங்களிலும் கேரள பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், தமிழ்நாட்டு பக்தர்கள் என பல்வேறு மாநில பக்தர்களும், மலேசிய பக்தர்களும் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். ஏராளமானோர் பால்காவடி, மயில்பீலி காவடி எடுத்து வந்திருந்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அதிக கூட்டம் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வகை காலஅவகாசம் ஏற்பட்டது.
தவிர மலைக்கோயில், இடும்பன் கோயில் படிவழியிலும் ஏராளமானோர் காவடிகளுடன் படியேறியவண்ணம் இருந்தனர். அடிவாரம் திருக்கோயில் விடுதிகள் உள்ளிட்ட ஏராளமான தனியார் விடுதிகளும் பக்தர்கள் வருகையால் நிரம்பி வழிந்தது. பழனி பேருந்து நிலையத்தில் மதியம் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறால் நால்ரோடு வரை பேருந்துகள் செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி தவித்தது. இரவு தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தங்கத்தேரில் அருள்மிகு சின்னக்குமாரசாமியை தரிசனம் செய்தனர்.
வியாழக்கிழமை மலைக்கோயிலுக்கு வனத்துறை அமைச்சர் எம்எஸ்எம்.ஆனந்தன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்.