முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனியில் இரு தரப்பினரிடையே மோதல்: எஸ்.பி  உள்பட 7 போலீஸார் காயம்: தொடரும் பதற்றம்

தேனி அல்லிநகரகத்தில் சனிக்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர்.தமிழனின் இறுதி ஊர்வலத்தின் போது,

Updated On : 27 டிசம்பர், 2014 at 7:27 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:16 PM

தேனி அல்லிநகரகத்தில் சனிக்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர்.தமிழனின் இறுதி ஊர்வலத்தின் போது, இருதரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீஸôர் தடியடி நடத்தினர்.

       இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற ஒருவர், டிராக்டரில் இருந்து தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். கல்வீச்சு சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெ.மகேஷ் உள்பட 7 போலீஸார் காயமடைந்தனர்.

       அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.தமிழன், பெங்களூருவில் வெள்ளிக்கிழமை அதிகாலை

Advertisement

மாரடைப்பில் உயிரிழந்தார். தேனியில் சனிக்கிழமை காலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தேனியில் இருந்து அல்லிநகரம் வழியாக சுக்குவாடன்பட்டிக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியகுளம் நெடுஞ்சாலையில், அம்பேத்கர் தெரு சந்திப்பு பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மீது இறுதி ஊர்வலத்தில் சென்ற சிலர் பூ மாலைகளை வீசியதாகவும், இதையடுத்து ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி மற்றொரு தரப்பினர் கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.

       அப்போது இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று, சாலையோரத்தில் நின்றுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை இடித்து தள்ளிக் கொண்டு அப்பேத்கர் தெருவுக்குள் அதிக வேகத்தில் திரும்பியது. இதில், டிராக்டரில் நின்றிருந்த  தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பல்லுப்பாண்டி என்ற ராமர், நிலைதடுமாறி கீழே விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

        இதையடுத்து இரு தரப்பினரிடையே கல் வீச்சு நடைபெற்றது. சாலையோரத்தில் இருந்த கடைகள் மற்றும் பெயர் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற கண்ணாடி நொறுக்கப்பட்டது. கலகல்வீச்சில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், ஆயுதப் படை காவலர்கள் புவனேஸ்வரன், காளிதாசன் ஆகியோர் காயமடைந்தனர். அப்போது போலீஸôர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

        துப்பாக்கி சூடு: பின்பு, ரத்தினா நகர் அருகே ஊர்வலத்தில் சென்றவர் கல் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். போலீஸôர் கூட்டத்தை கலைக்க முயன்றதில், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், ஆயுதப் படை சிறப்பு சார்பு ஆய்வாளர் இளமுருகு பாண்டியன், காவலர் ரமேஷ் ஆகியோருக்கு காயமடைந்தனர். இதையடுத்து கலவரம் ஏற்படுவதை தடுப்பதற்கு காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

       சாலை மறியல்: இறுதி ஊர்வலத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை கண்டித்து அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்பு, பெரியகுளம் சாலையில் கல் வீச்சில் ஈடுபட்டனர். இந்த கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து மற்றொரு தரப்பினர் மோதலுக்கு தயாரான நிலையில், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் தேனியில் பதற்றம் நிலவியது. அல்லிநகரம் வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

         மதுரை தென்மண்டல ஐ.ஜி.அபயகுமார், திண்டுக்கல் டி.ஐ.ஜி.,அறிவுச்செல்வம், எஸ்.பி.,சரவணன் ஆகியோர் கலவரப் பகுதியை பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.