கடலூர் மாவட்டத்தில் 'அறுவாமூக்கு' திட்டத்தை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ முதல்வருக்கு கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் கீழப்பரவனாறு கரைகளை உயர்த்தி, 'அறுவாமூக்கு' திட்டத்தை செயல்படுத்தி வெள்ளச் சேதத்திலிருந்து 30 கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த
கடலூர் மாவட்டத்தில் கீழப்பரவனாறு கரைகளை உயர்த்தி, 'அறுவாமூக்கு' திட்டத்தை செயல்படுத்தி வெள்ளச் சேதத்திலிருந்து 30 கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதவிபரம்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பாசனம் மற்றும் வடிகால் வசதிக்காக பரவனாறு, கீழ்ப்பரவனாறு, தலைப்பரவனாறு, இடைப் பரவனாறு என உள்ளது. இவ்வற்றில் தலைப்பரவனாறு, இடைப்பரவனாறு ஆகிய பகுதிகளில் நிதி ஒதுக்கப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கீழ்ப்பரவனாறு பகுதிகளில் மட்டும் கரைகள் உயர்த்தப்படவில்லை. இதனால் வெள்ளக் காலங்களில் கீழ்பகுதி கிராமங்களான ஆடூர், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூவாலை, வயலாமூர், சாத்தப்பாடி, சொக்கன்கொல்லை, பால்வாத்துண்ணான், காக்காமண்டபம், வில்லியநல்லூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட 30 கிராமங்களில் வெள்ள நீர்புகுந்து பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் குடியிரகுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே வெள்ளச் சேதத்தை தடுத்திட பரவனாற்று கரைகளை உயர்த்தி அமைப்பதுடன், வெள்ளநீர் நேரடியாக கடலில் சென்று கலக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'அறுவாமூக்கு' திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக பாதுகாத்திட முடியும். மேலும் பரவனாற்றில் ஆண்டு முழுவதும் கடலில் சென்று வீணாகும் நீரை தேக்கி பயன்படுத்த சிதம்பரம்- கடலூர் நெடுஞ்சாலையில் (பெரியப்பட்டு கிராமத்திற்கு அருகில்) நீர் போக்கிகளுடன் தடுப்பணை அமைத்திட வேண்டும். இதன் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோடை கால சாகுபடி பெறும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.