சேத்தியாத்தோப்பு அருகே ஆயுதப்படைக்காவலர் அடித்து கொலை: சாலைமறியல், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆயுத்தப்படை காவலர் ஒருவர் செய்யப்பட்டு இறந்து கிடந்தார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆயுத்தப்படை காவலர் ஒருவர் செய்யப்பட்டு இறந்து கிடந்தார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அறந்தாங்கி சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வக்குமார் (29). இவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் தெய்வக்குமார் பிப்.10-ம் தேதி இரவு சோழத்தரம் அருகே பெரியகுப்பத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் காலை வீடு திரும்பவில்லை. செவ்வாய்க்கிழமை காலை தெய்வக்குமார் மர்மநபர்களால் தாக்கப்பட்டு சோழத்தரம் கோவிந்தநல்லூர் கைகாட்டி பூங்கா அருகே காது அறுபட்டு நிலையில், தலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, குற்றவாளிகளை உடன் கைது செய்ய வலியுறுத்தி, உடலை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்த மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவலர் தெய்வக்குமார் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காவலர் தெய்வகுமாரின் சகோதரர் செந்தில்குமார் சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் திங்கள்கிழமை இரவு அண்ணன் தெய்வக்குமார் பெரிகுப்பத்தில் பாதுகாப்பு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது இரவு சோழத்தரம் கடைத்தெருவில் மூவர் தகராறு செய்து கொண்டிருந்ததை தட்டிக் கேட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அதிகாலை பணி முடிந்து திரும்பி வரும் போது மேற்கண்ட நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோழத்தரம் போலீஸார் சந்தேகமரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.