அரசியலில் ஏன் வாரிசுகளை உருவாக்ககூடாது: மு.க.ஸ்டாலின்
அரசியலில் ஏன் வாரிசுகளை உருவாக்கக்கூடாது. தனது வாரிசுகள் இயக்கத்திற்கு துணை நிற்பார்கள் என்பதை அப்போதே அடையாளம் காட்டிவிட்டு சென்றவர் மூத்த தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என
அரசியலில் ஏன் வாரிசுகளை உருவாக்கக்கூடாது. தனது வாரிசுகள் இயக்கத்திற்கு துணை நிற்பார்கள் என்பதை அப்போதே அடையாளம் காட்டிவிட்டு சென்றவர் மூத்த தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயில் முட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவனுக்கும், தொழிலதிபர் எம்ஏஎம்.ராமசாமி நேர்முக உதவியாளர் எஸ்.ராஜேந்திரன் மகள் சுகன்யாவிற்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திருமணத்தை நடத்தி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
அரசியல் வாரிசுகள் பற்றி சிலர் எரிச்சல் அடைகின்றனர். வாரிசுகளை ஏன் உருவாக்கக்கக்கூடாது. வாரிசுகள் உருவாகினால் சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலருக்கு வாரிசுகளே இல்லை என்பதால் எரிச்சலில் பேசுகின்றனர். அதற்கு நாம் என்ன செய்வது. அவர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படுகின்றாரா என பார்க்க வேண்டும். வாரிசாக பார்க்கக்கூடாது. மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தான் காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தபோது உடன் இருந்தவர் மணமகன் கதிரவன்.
இவர் திமுக பேரியக்கத்திற்கு துணை நிற்பார்கள் என காட்டிவிட்டு சென்றுள்ளார். திமுக துணை அமைப்பான திமுக இளைஞரணியை 1980-ம் ஆண்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் கருணாநிதி தொடங்கி வைத்தார். 1982-ல் திருச்சியில் இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் 6 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை நியமித்தோம். அப்போது காட்டுமன்னார்கோயில் ஒன்றிய இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் காட்டுமன்னார்கோயிலில் முட்டம்-மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது. பணி முடிவுதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது பாலம் பணி முடிவுற்றாலும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த திருமணம் நிகழ்ச்சிக்கு பாலம் வழியாக வரக்கூடாது என பள்ளம் தோண்டி வைத்தனர். அதனை சீரமைத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்னை அப்பாலம் வழியாக அழைத்து வந்து திறந்து வைத்துள்ளார். இதற்காக எனது மீதும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதும் வழக்கு போட்டாலும் போடுவார்கள். ஏன் மணமக்கள் மீதுகூட வழக்கு போடுவார்கள். திருச்சியில் வருகிற பிப்.15,15 தேதிகளில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டிற்கு முன்னோட்டமாக இந்த மணவிழா நடந்துள்ளது. திருச்சி மாநாடுதான் மணமக்களுக்கு தேணிலவாகும். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் தேணிலவாகும் திருச்சி திமுக மாநாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருமண விழாவில் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், முன்னாள் அமைச்சர்கள் செஞ்சிராமச்சந்திரன், க.பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, கோ.சி.மணி, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.