விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தவிர்க்க, ஒவ்வொரு அறையிலும் ஒரு ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு, விபத்துக்களினால் மனித உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் அரசு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 692 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் மருந்து உராய்வினால் திடீர் வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் எதிர்பாரதவிதமாக மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் விபத்து ஏற்படாத வகையில் செயல்படுவதற்கு அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே விபத்துக்களை தவிர்க்க முடியும்.
பட்டாசு ஆலையில் இரும்பு சுத்தி, இரும்பு தராசு மற்றும் இரும்பு கத்தரிக்கோல் ஆகியவற்றை கையாளக் கூடாது. குறைந்தது 30 பெண்கள் பணியாற்றும் ஆலையில் குழந்தைகள் காப்பகம் அமைத்திருக்க வேண்டும். அதேபோல், பட்டாசு ஆலையில் பெண்கள் காட்டன் புடவைகளையே அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல், அனைவரும் பயன்படுத்தும் வகையில் தொழிற்சாலை அருகே சிற்றுண்டியகம் இருக்க வேண்டும்.
ரசாயன வெடிமருந்து அறையில் பணிக்கு உள்ளே செல்லும் போது காப்பார் பிளேட் மேல் கை வைத்து, உடலில் இருந்து நிலைமின்சாரத்தை வெளியேற்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசு வளாகத்திற்குள் உலர் தரையில் 2 மீட்டர் இடைவெளியில் 1 அடி உயரத்தில் 4 பக்கமும் சுவர் எழுப்பிருக்க வேண்டும். பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படும் அறைகள் தனித்தனியாக இருந்தால் விபத்திலிருந்து காக்க முடியும். ஒவ்வொரு 50 தொழிலாளர்களுக்கும், ஒரு மேற்பார்வையாளர் நியமித்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அறையிலும் ஒரு பட்டாசு ரகத்தை மட்டும் தயாரிக்க வேண்டும். ராக்கெட் காயவைக்கும் உலர் மேடையின் மேற்பகுதி அலுமினிய மெஸ் கவரால் அமைத்திருக்க வேண்டும்.
பட்டாசு ஆலைக் கழிவுகளை எரிப்பதற்கு 62 மீட்டருக்கு ஒரு குழி அமைத்து ஒவ்வொரு நாளும் எரித்து விட வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டப்படி 250 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை குறைப்பதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.