சிதம்பரம் திருப்பாற்கடல் இடம் ஆக்கிரமிப்பை பிப்.26-க்குள் அகற்ற உதவிஆட்சியர் நோட்டீஸ்
சிதம்பரம் திருப்பாற்கடல் இடம் ஆக்கிரமிப்பை பிப்.26-ம் தேதிக்குள் அகற்ற தனியார் பள்ளி தாளாளருக்கு உதவிஆட்சியரும், சிதம்பரம் உட்கோட்ட நிர்வாக நடுவருமான எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்து
சிதம்பரம் திருப்பாற்கடல் இடம் ஆக்கிரமிப்பை பிப்.26-ம் தேதிக்குள் அகற்ற தனியார் பள்ளி தாளாளருக்கு உதவிஆட்சியரும், சிதம்பரம் உட்கோட்ட நிர்வாக நடுவருமான எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்து சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போனது.
கடந்த 2-10-2013ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் ஒரு பகுதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. திருப்பாற்கடல் குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ள அம்பலத்தாடி மடத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அவ்விடத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நடைபெற்று வருகிறது. இறைவனால் உருவாக்கப்பட்ட திருப்பாற்கடல் குளம் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே திருப்பாற்கடலை முற்றிலுமாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் உதவிஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் குளத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நுழைவுவாயில் உள்ளது. தூர்வாரப்பட்ட குளத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி நிர்வாகம் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கியது.
இதற்கு நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் சென்று, திருப்பாற்கடல் குளத்தில்தான் பள்ளி நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பினை அகற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே குளத்தில் தடுப்புசுவர் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடம் பேசி, தடுப்புச்சுவர் அமைப்பதை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் உதவிஆட்சியர் சனிக்கிழமை குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 133 (1)-ன் கீழ் பள்ளி தாளாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு விபரம்:
சிதம்பரம் வேங்கான்தெரு வார்டு-3, பிளாக்-4, T.S.No.216-nd 0.0617 ச.மீ (6641 ச.அடி) பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் அமைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நகர அளவர் ஆகியோர் மூலம் புலத்தணிக்கை செய்து அறிக்கை பெறப்பட்டது. மேற்படி இடம் 6641 ச.அடி பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் உள்ளது. இதில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் 3 ஆயிரம் சதுரஅடி ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் ஷீட் கொட்டகை போட்டுள்ளது.
எனவே மேற்படி இடம் நீர்வழி புறம்போக்கு என்பதால், இந்த இடம் பொதுமக்கள் நலன் கருதி பொதுநன்மைக்காக பயன்படுத்தக்கூடியது. மேற்படி ஆக்கிரமிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே திருப்பாற்கடல் குளம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள சிமெண்ட் ஷீட் கொட்டகையை பிப்.26-ம் தேதிக்குள் அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விபரத்தையோ அல்லது எழுத்து மூலமான விளக்கத்தையோ சிதம்பரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் உதவிஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்துள்ளார்.