முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் கட்சி மீது மக்களிடம் எதிர்மனோ நிலை உருவாகும் : தொல்.திருமாவளவன்

இலங்கை தமிழர் பிரச்சனையினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீதும், அக்கட்சியோடு கூட்டணி வைக்கும் கட்சிகள் மீதும் மக்களிடம் எதிர் மனோநிலை உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

இலங்கை தமிழர் பிரச்சனையினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீதும், அக்கட்சியோடு கூட்டணி வைக்கும் கட்சிகள் மீதும் மக்களிடம் எதிர் மனோநிலை உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளையில் இந்தியாவை மதவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளதால், அந்த அடிப்படையில்தான் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

சிதம்பரம் நகருக்கு புதன்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கலவரத்தை தூண்டுவதாக என் மீது ராமதாஸ் அபாண்டமாக, அவதூறாக பழி சுமத்துகிறார். அவரது குற்றச்சாட்டிற்கு எந்த ஆதராமும் இல்லை. குறிப்பாக தமிழகத்தில் தலித் எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து, ஜாதி வெறியை தூண்டி, வண்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, அதன் மூலம் ஜாதி வாக்குகளை திரட்டிவிட முடியும் என பாமக நம்புகிறது. 1999-ல் அப்படிதான் கலவரத்தை தூண்டி வெற்றி பெற்றார்கள். அதே யுக்தி மீண்டும் கையாளுவது பயனளிக்கும் என்று நம்புகிறார்கள்.

விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தோல்வி பயத்தில் வன்முறையை வெளிப்படையாக பாமக நிறுவனர் ராமதாஸ் தூண்டி வருகிறார். சிதம்பரம் தொகுதியில் மீண்டும் வன்முறையை தூண்டுவதற்கு முயற்சித்து வருகிறார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் வடமாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. ஆனால் பாமகவினர் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடருகிறது. இந்த அணியில் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19 கோடி இந்த தொகுதியின் அடிப்படை வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது கார்ப்பரேட் நிதியிலிருந்து ரூ 50 லட்சம் செலவிலும், இதய அறுவை சிகிச்சை நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி பெற்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை மூலம் ரூ.4 கோடி நிதிபெற்று நமது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி 50 சதவீத தலித் மக்கள் வசிக்கும் கிராமங்கள் கண்டறியப்பட்டு. ஒரு ஊராட்சிக்கு ரூ.20 லட்சம் நிதி அடிப்படை வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் வெற்றிபெற்றால் வன்முறை காடாகும். மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என எனக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திலேயே இத்தொகுதி அமைதி பூங்காவாக விளங்கியது. அனைத்து சமூக மக்களிடம் நல்லிணக்கத்தோடு வாழும் சுமூக சூழல் இருந்து வருகிறது. இச் சுமூகமான சூழல் தொகுதியில் தொடரும். நாடாளுமன்றத் தேர்தலை என்பது வெறும் வாக்கு வங்கி தேர்தலாக பார்க்கவில்லை. கோட்பாட்டு அறப்போர் களமாக பார்க்கிறோம். ஒரு புறம் ஜாதிய மதவாத சக்திகள் ஒருபுறம், மதசார்பின்மை மற்றும் சமூக நீதி கோட்பாட்டை பாதுகாப்பதற்கான சக்திகள் மற்றொரு புறம் என்று இரு அணிகளாக அகில இந்திய அளவில் இந்த தேர்தலில் சந்திக்கின்றோம்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் ராஜபட்சே எதிராக போர்க்குற்ற விசாரணையை கொண்டு வருவதற்கு, சர்வதேச புலன் விசாரணை அமைக்க இந்தியஅரசு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்கா எடுக்கும் முயற்சிக்கு இந்தியஅரசு ஆதரவு அளிக்க வேண்டும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்வதற்கு தமிழகஅரசு முன்வந்தாலும், அது உரிய வழிமுறைகளை மேற்கொள்ளாததால் தடை விதிக்க காரணமாகியுள்ளது. என அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்ய தமிழகஅரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக திகழ்கிறது. அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் அணியாக திகழும். தமிழகத்தில் மோடி அலை வீசுவது என்பது மாயையாகும். சமூகநீதி மண் இது. சாதி, மதவெறிக்கு மக்கள் இடம் தரமாட்டார்கள். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணிக்கு வந்தாலும், அதற்கு திமுக தலைமை முயற்சி எடுத்தால் அதற்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். தமிழகத்தை பொறுத்தவரை எத்தனை அலை அடித்தாலும், எத்தனை அணி உருவானாலும் திமுக, அதிமுக அணி இடையேதான் போட்டி நிலவும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமூகநீதி, சமூகஅமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நிலை நாட்டுவோம் என்ற அடிப்படை முழக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம்.

அதிமுகவின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வாக்காளர்களை ஏமாளிகளாக கருதுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அகில இந்திய அளவில் ஆடு, மாடுகள் வழங்கப்படும் என்பது அதனை வெளிப்படுத்துகிறது. தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமரானால் மகிழ்ச்சிதான். ஆனால் மக்களை ஏமாளிகளாக கருதுவதும், கவர்ச்சி முழக்கங்களை முன்வைப்பதும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன் (கடலூர் தெற்கு), வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன் (கடலூர் கிழக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.