வேகமாக குறைகிறது நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்: கோடையை சமாளிக்க முடியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கோடையில் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் உள்ளது.
நிரம்பாத அணைகள்: பருவ மழை கடந்த சில ஆண்டுகளாக சரிவர பெய்யாததால் அணைகளும் நிரம்பவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. இதனால் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்தில் தொடங்கிய போதிலும், முந்தைய ஆண்டை விட இப்பருவத்தில் 12.6 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. பருவ மழையை எதிர்பார்த்து தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பாசனத்தில் சுமார் 46,000 ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாசனத்திற்கு தண்ணீர்: பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து சராசரியாக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2013 ல் டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்தவாறு மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்து, அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நிகழ் பிசான பருவ சாகுபடிக்கு இன்னும் 60 தினங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது.
வேகமாக குறைகிறது: கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. புதன்கிழமை (ஜன.1 2014) பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 223.61 கனஅடி மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் பாசனம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அணையில் இருந்து 500 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 84.95 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 94.82 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.60 அடியாகவும் இருந்தது.
இம்மாவட்டத்தில் அடவிநயினார், கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் 32,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 24 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு விநாடிக்கு தலா 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 57.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 49.51 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 84.00 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 15.00 அடியாகவும் இருந்தது.
குடிநீர் தட்டுபாடு அபாயம்:
அணைகளின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை சமாளிக்க வேண்டும். நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரை காப்பாற்ற வேண்டும். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் கடும் குடிநீர் தட்டுபாடு எழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சுழற்சி முறையில் தண்ணீர்? எனினும் தை மாதத்தில் மழை கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு சில தினங்களில் பாசனக் கால்வாய்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அணைகளின் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளும், அதிகாரிகளும் கவலையில் உள்ளனர்.