பிஹெச்டி கல்வி கட்டணம் கட்டாத அண்ணாமலைப் பல்கலை. 286 துணைப் பேராசிரியர்களின் ஊதியம் நிறுத்தம்
பிஹெச்டி முனைவர் பட்டம் படித்த கல்வி கட்டணத்தை செலுத்தாத அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர்களின் 286 பேரின் டிசம்பர் ஊதியம் நிறுத்தி
பிஹெச்டி முனைவர் பட்டம் படித்த கல்வி கட்டணத்தை செலுத்தாத அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர்களின் 286 பேரின் டிசம்பர் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்பு தனியார் நிர்வாகம் இருந்த போது துணைப் பேராசிரியர்கள், தாங்கள் பிஹெச்டி (முனைவர்) பட்டப்படிப்பு பயின்றதன் கல்வி கட்டணத்தை செலுத்தாமல், படிப்பு முடிந்தவுடன் நிர்வாகத்திடம் கூறி தொகையை குறைத்து இறுதியில் கட்டணத்தை செலுத்தி முனைவர் பட்டத்தை பெற்று வந்தார்கள்.
தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடி, நிதிமுறைகேடு காரணமாக தமிழகஅரசு, சட்டப்பேரவையில் தனியாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து சட்டதிருத்தம் கொண்டு வந்து அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி (முனைவர்) பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை செலுத்தாமல் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 286 துணைப் பேராசிரியர்களின் டிசம்பர் மாத ஊதியத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. பிஹெச்டி கல்வி கட்டணத்தை குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்த வேண்டும். கல்வி கட்டணத்தை செலுத்தாத வரையில் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு துணைப் பேராசிரியரும் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊதியம் நிறுத்தப்பட்ட துணைப் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கையில் 'பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பு கடிதமும், துணைப் பேராசிரியர்களுக்கு அளிக்காமல் இத்தகைய நடநவடிக்கையை எடுத்துள்ளது. 286 துணைப் பேராசிரியர்களும் நிரந்திர பணியாளர்கள் ஆவார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் ஊதியத்தை நிறுத்தியுள்ளதால் கடன் வாங்கி பொங்கல் பண்டியை கொண்டாட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்' என்றார்.