முகப்பு
தற்போதைய செய்திகள்

39 அம்சங்களை உள்ளடங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா: அமைச்சர் எம்.சி.சம்பத்

விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், மாடு, ஆடு, மிக்சி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட 39 அம்சங்கள் உள்ளடங்கிய பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றியவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், மாடு, ஆடு, மிக்சி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட 39 அம்சங்கள் உள்ளடங்கிய பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என தமிழக வணிகவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே மணலூர் லால்புரம் ஊராட்சியில் தமிழகஅரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் எம்.நடனமயிலோன் வரவேற்றார்.

விழாவில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று ரூ.50 லட்சம் செலவில் 1393 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை வழங்கிப் பேசினார். அவர் பேசியது: வாக்குறுதிகளில் தலைசிறைந்த வாக்குறுதி விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கியதுதான். மகளிர் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைக்கும் வகையிலும், மகளிர் கஷ்டங்களை போக்க வேண்டும் எனக்கருதி விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டார்.

மகளிர்களின் விடிவெள்ளியாக திகழ்பவர் ஜெயலலிதா. நடப்பு நிதி ஆண்டில் ரூ.5500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2014 மார்ச்சுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் 95 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கப்பட்டு வருகிறது. 2014-15 ஆண்டில் நகராட்சி, பேரூராட்சி பகுதியில் வழங்கப்படவுள்ளது. இந்த பொருள்களை யாருக்கும் இரவல் கொடுக்கக் கூடாது, விற்கக்கூடாது. இது முதல்வர் ஜெயலலிதா வழங்கிய சீதனமாகும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

விழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழித்தேவன், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், கடலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், தில்லை ஏ.கே.எஸ்.சேசர், தில்லை கோபி, டேங்க் ஆர்.சண்முகம், சி.கே.சுரேஷ்பாபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டாட்சியர் எம்.விஜயா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.