அம்பை அருகே ரேசன் கடைக்குள் புகுந்த வெள்ளம்:10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்தது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே எலுமிச்சையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளதால் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்கு வியாழக்கிழமை மழை நீர் புகுந்தது. இதில்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே எலுமிச்சையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளதால் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்கு வியாழக்கிழமை மழை நீர் புகுந்தது. இதில் 10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்து ஓடியது. அரிசி, துவரம் பருப்பு, கோதுமை ஆகியன சேதமடைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பலத்த மழையால் அம்பாசமுத்திரம் அருகே 4 கி.மீ தொலைவில் பொட்டல் கிராமத்தை அடுத்து செல்லும் எலுமிச்சை ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூலச்சி பொட்டல் கிராமத்தை இணைக்கும் ஆற்றுப் பாலத்தில் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் சென்றது.
ஆற்றின் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் கடையில் இருந்த அத்யாவசியப் பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தன. கடையில் இருந்த 10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்த ஓடியது. துவரம் பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தது.
பொட்டல் ஊராட்சித் தலைவர் எஸ். முருகன், கூட்டுறவுத்துறை அதிகாரி பா. சங்கரன், கல்லிடைக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். முத்துக்குமார், செயலர் க. மோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். கடையில் இருந்து வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள அத்யாவசியப் பொருட்கள் சேதமடைந்தாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.