முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில்  ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சனிக்கிழமை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில்  ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சனிக்கிழமை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலாகும்.  இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஸ்ரீவைகுண்ட ஏகாதசி,  ஸ்ரீராமநவமி,  ஸ்ரீஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது.  சனிக்கிழமை ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அருள்மிகு இலக்குமி நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.  தொடர்ந்து அதிகாலை நான்கு மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு மேளதாளங்கள் சகிதமாக கருடவாகனத்தில் பெருமாள் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு வெளியே வந்தார்.  முன்னதாக திருமங்கையாழ்வார் சப்பரத்தில் எதிர்சேவை செய்து வரவேற்பு வழங்கினார்.  பின்னர் இலக்குமி நாராயணசுவாமி திருமங்கையாழ்வாருடன் கோயிலின் உட்பிரகாரம் உலாவும், நான்கு இரதவீதிகள் உலாவும் எழுந்தருளினார்.  

இராப்பத்து எனப்படும் பத்து நாட்களும் கோயிலில் பரமபதவாசல் திறந்திருக்கும். பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் கோயிலின் உள்ளே மலர்ப்பந்தல் அலங்காரமும், ஒருடன் அரிசியில் சிறப்பு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை வந்ததால் பனியையும் பொருட்படுத்தாது அதிகாலை மூன்று மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் உட்பிரகாரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், அருள்மிகு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்புமலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.  விழாவில் பழனிக்கோயில் இணைஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, பேஷ்கார் முரளி, புஷ்பகைங்கர்ய சபா மருதசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.