பத்தமடை: விலையில்லா பொருட்களுக்கு டோக்கன் வாங்க சென்ற பெண் சாவு
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய விலையில்லா பொருட்களுக்கான டோக்கன் வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து திங்கள்கிழமை இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய விலையில்லா பொருட்களுக்கான டோக்கன் வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து திங்கள்கிழமை இறந்தார்.
பத்தமடை முதல்நிலை பேரூராட்சியில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய விலையில்லா பொருட்கள் வழங்க 4,200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு திங்கள்கிழமை அங்குள்ள மதரசா கட்டடத்தில் வைத்து டோக்கன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பயனாளிகள் அதிகாலையில் இருந்தே டோக்கன் வழங்கும் மையத்தில் திரண்டனர்.
அங்கு பயனாளிகள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனராம். கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கிராம உதவியாளர் சங்கரலிங்கம் மற்றும் பணியாளர்கள் 10 மணிக்கு டோக்கன் வழங்கும் மையத்திற்கு வந்தனராம். 8 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் மலுக்காமலி உதவியுடன் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
பள்ளிவாசல் வடக்கு தெருவை சேர்ந்த ஜமால்மைதீன் என்பவரின் மனைவி செய்யதுமீராள் (50) என்பவரும் பல மணி நேரம் காத்திருந்து டோக்கன் வாங்கினாராம். டோக்கனை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய செய்யதுமீராள் மையத்தின் முன்பு திடீரென மயங்கி விழுந்தார்.
ஏற்கனவே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரை உறவினர்கள் வீட்டுக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் விசாரணை நடத்தினர்.