ஸ்ரீவிலி.யில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம், கபேர் தெருவைச் சேர்ந்தவர் சா.சந்திரசேகரன் (60). இவர் கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடைசியாக 1.4.12-ம் தேதி தனது ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். சிறிது நாள் கழித்து கணக்கில் மீதித் தொகையை பார்ப்பதற்காக ஏ.டி.எம். அட்டையை போட்டுப் பார்த்துள்ளார். பணம் குறைவாக இருந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கிக்கு நேரில் வந்து கணக்கை சரிபார்த்துள்ளார். அதில் 12.4.12-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி ஏ.டி.எம்.ல் ரூ.50 ஆயிரம், 14.4.12-ம் தேதி ராஜபாளையம் கனரா வங்கி ஏ.டி.எம்.ல் ரூ.25 ஆயிரம், அதே ஏ.டி.எம்.ல் 15.4.12-ம் தேதி ரூ.25 ஆயிரம், 16.4.12-ம் தேதி மதுரை திருநகர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.ல் ரூ.25 ஆயிரம், 17.4.12-ம் தேதி திருநகர் கனரா வங்கி ஏ.டி.எம். ல் ரூ.25 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை இரவு சந்திரசேகரன் புகார் செய்தார். தனது பணம் ரூ.1.50 லட்சத்தை தனது கணக்கில் இருந்து எடுத்து மோசடி செய்து நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement