ராஜினாமா செய்ய தயார்: உக்ரைன் பிரதமர் அறிவிப்பு
உக்ரைனில் அதிபர் விக்டர் யானுகோவிச்சி மற்றும் பிரதமர் அசோராவுக்கு எதிராக அங்கு 2 மாத காலமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் அதிபர் விக்டர் யானுகோவிச்சி மற்றும் பிரதமர் அசோராவுக்கு எதிராக அங்கு 2 மாத காலமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக எதிர்கட்சி தலைவர் உட்பட இரு முக்கிய நபர்களுக்கு தனது அரசில் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவியை அளிப்பதாக அதிபர் விக்டர் சமீபத்தில் வாக்குறுதியளித்தார்.
இதனை ஏற்க அந்நாட்டு எதிர் கட்சி தலைவர் ஆர்செனி யாட்சென்யுக் மறுத்துள்ளதுடன் தமது போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்தார். இதனையடுத்து தலைநகர் கீவில் அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பிரதமர் அசோராவுக்கு நெருக்கடி அதிகரித்ததையடுத்து இன்று பதவி விலக முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதியை ஏற்படுத்துவதற்காக தான் பதவியை விட்டு விலக தயார்என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு எதிர்கட்சிதலைவர் ஆர்செனி யாட்சென்யுக், பிரதமர் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என்றும், அரசை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் ஐரோப்பிய யூனியனுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும், முன்னால் பிரதமர் யூலியா டைமோஷெங்கோ உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் 2015 ஆம் ஆண்டுக்கு முன்பாக அங்கு அதிபர் தேர்தலை நடத்த கோரியும்போராட்டம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.