பழனி மலைக்கோயிலில் உலகநலன் வேண்டி அன்னாபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்கு பூஜை
பழனி மலைக்கோவிலில் வியாழக்கிழமை உலகநலன் வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கசப்பரத்தில் சண்முகநதி, இராமேஸ்வரம், காசி,
பழனி மலைக்கோவிலில் வியாழக்கிழமை உலகநலன் வேண்டி அன்னாபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
பழனி மலைக்கோவிலில் வியாழக்கிழமை உலகநலன் வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கசப்பரத்தில் சண்முகநதி, இராமேஸ்வரம், காசி, பத்ரிநாத் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய தீர்த்தங்களில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு நான்கு கலசங்களில் நிரப்பி பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற யாகசாலையில் 108 வலம்புரி சங்குகள் முழுக்க புனிதநீர், மலர்கள் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது.
பிரதானமான வெள்ளிப்பூண் போட்ட பெரிய வலம்புரி சங்குக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமண்ய குருக்கள் உள்ளிட்ட ஏராளமான சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் ஓதி, பாராயணம் செய்ய, மேளதாளத்துடன் முழங்க யாகசாலை பூஜை நடைபெற்றது. இதற்கான உபய ஏற்பாடுகள் பழனி சித்தனாதன் சன்ஸ் சார்பில் செய்யப்பட்டது. யாகபூஜை நிறைவில் திரவிய பொருட்கள், மூலிகை பொருட்கள் ஆகியன பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கலசங்கள் கோவிலை சுற்றி வலம்வர செய்யப்பட்டு உச்சிக்காலத்தின் போது மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, அன்னம் கலந்த உணவு சிரசில் கிரீடமாகவும்,மகரகுண்டலமாகவும், மார்பிலும் பூசப்பட்டது. பீடம் முழுக்க சுத்தஅன்னம், வில்வம், கனிவகைகள், மலர்கள் கொண்டு நிரப்பப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சோடஷ தீபாராதனை, சோடஷ உபச்சாரம் ஆகியன நடைபெற்றது. விழா நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுத்தஅன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் உதவி ஆணையர் மேனகா, டிஎஸ்பி.,சண்முகசுந்தரம், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, வழக்கறிஞர் ராகவன், செந்தில்குமார், கொங்கு மாரிமுத்து, வள்ளுவர் தியேட்டர் நடராஜன், சுகந்த விலாஸ் மகேஷ், மிராஸ் பண்டாரங்கள் சங்கத்தினர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.