நெல்லை: சொந்த நிலத்தை பறிகொடுத்த பெண்கள் தற்கொலை முயற்சி, பரபரப்பு
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தங்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை சிலர் அபகரித்து கொண்டதாக புகார் தெரிவித்து பெண்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தங்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை சிலர் அபகரித்து கொண்டதாக புகார் தெரிவித்து பெண்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வடக்கு கீழமாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர்கள் முத்தையா மனைவி வீரம்மாள் (62), குருசாமி மனைவி ஆவுடையம்மாள், பழனிச்சாமி மனைவி கோவிந்தம்மாள் மற்றும் கனகம்மாள், கனகம்மாள் மகன் முத்துபாண்டி, லட்சுமி உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.வீரம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சிவகிரி ஜமீன்தார் எழுதி கொடுத்த 15 ஏக்கர் நிலத்தை அங்கு வசிக்கும் சிலர் தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து ஆக்கிரமித்து கொண்டு அனுபவித்து வருகின்றனர்.
கல்வி அறிவு இல்லாத தங்களை ஏமாற்றி சொத்தை அபகரித்து கொண்டதாகவும், தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தங்களது உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டிகள் தங்கள் சொத்தை மீட்டு தருமாறு கண்ணீருடன் வலியுறுத்தியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
முத்துபாண்டியை போலீஸார் விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றனர். மகனை போலீஸார் பிடித்து செல்வதை அறிந்த கனகம்மாள் மற்றும் உறவினர் போலீஸ் வேனுக்கு பின்னாடியே சென்று முத்துபாண்டியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் போலீஸார் அப்பெண்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.