பழனி அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலம் பாதைக்காக ஆக்கிரமிப்பு
பழனி மலைக்கோயில் மேலே மலைமேல் உள்ள பழைய ஆயக்குடி பாண்டியவேளாளர் தர்மதண்ணீர் கட்டளை மடம் உள்ளது. மேற்படி மடம் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயில்
பழனி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனியார் பாதைக்காக ஆக்கிரமிப்பு செய்ததைத் தொடர்ந்து அலுவலர்கள், விவசாயிகள் அளந்து பார்த்து அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
பழனி மலைக்கோயில் மேலே மலைமேல் உள்ள பழைய ஆயக்குடி பாண்டியவேளாளர் தர்மதண்ணீர் கட்டளை மடம் உள்ளது. மேற்படி மடம் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மடத்தின் கட்டளை பூஜைக்காக நிலங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயக்குடி மேற்கு பகுதியில் செம்மேடு மற்றும் வாரிவயல் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலங்கள் உள்ளது. வண்டிப்பாதையின் மேல் உள்ள இந்த நிலங்கள் ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்படுவது வழக்கம். தற்போது மழை பொய்த்ததால் நிலம் பயன்பாடின்றி உள்ளது.
இந்நிலையில் மலைஅடிவாரம் பகுதியில் நிலம் வைத்திருக்கும் மோகன் மற்றும் சிலர் தங்கள் வயலுக்கு செல்ல ஏதுவாக வண்டிப்பாதையின் இருபுறமும் சுமார் 10 அடி அகலத்துக்கு கிணற்று மண்ணை மேவி பாதையை அகலம் செய்து ஆக்கிரமிக்கும் பணியை கடந்த சிலநாட்களாக செய்து வந்துள்ளனர். இதற்கு ஜேசிபி, டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பில் இடும்பன் கோயிலுக்கு சொந்தமான நிலம் சுமார் ஒரு ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த இடும்பன் கோயில் செயல்அலுவலர் வேலுச்சாமி உத்திரவின்பேரில் மேற்படி நிலத்தில் மேலாளர் மாரிமுத்து மற்றும் விவசாயிகள் அளவீடு பணிகள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், மேற்படி நிலத்தை அகலப்படுத்தியது பலருக்கும் தெரியவில்லை. ஒரு ஏக்கர் மட்டுமே உள்ள சிலரது நிலத்தில் பாதிக்கு பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்த போது போலீஸார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆகவே, மேற்படி நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், தாலுகா அலுவலகம், காவல்துறைக்கு புகார் செய்துள்ளோம். நிலத்தை மீண்டும் மீட்க பலஆயிரம் செலவிட வேண்டி உள்ளதால் இப்பணியை செய்தவர்களை மீண்டும் கற்களை அகற்றி சரிசெய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.