கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் தர்ணா போராட்டம்!
கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைநகர்
கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைநகர் பூமாகோயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்சி., எஸ்டி மாணவர்கள் செலுத்தக்கூடிய எந்தவித கல்வி கட்டணத்திர்கும் அபராதம் கிடையாது என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், அரசிடம் இருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகையை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும், அரசாணை 92-ன் படி தமிழகஅரசு வழங்கியுள்ள ரூ.48 கோடி தொகையினை உடனே தலித் மாணவர்களுக்கு வழங்க வேண்டும், டிசி உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்கு ரூ.400 தொகை பெறுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வளர்மதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் புல பிரிவு மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், எஸ்சி., எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்ராஜா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவர்கள் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், மாணவர்கள் பூமா கோயில் முன்பு அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.