சிதம்பரத்தில் வாலிபர் தூக்குமாட்டிய நிலையில் மர்மசாவு: அடக்கம் செய்ய முயன்ற போது சடலத்தை கைப்பற்றிய போலீஸார்
சிதம்பரம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்திருந்தார். போலீஸாருக்கு தெரியாமல் உடலை அடக்க செய்ய முயன்றதை அறிந்த போலீஸார்,
சிதம்பரம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்திருந்தார். போலீஸாருக்கு தெரியாமல் உடலை அடக்க செய்ய முயன்றதை அறிந்த போலீஸார், சடலத்தை கைப்பற்றி சந்தேக மரணம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் கார்த்திகேயன் (27). கோயில் சிற்ப வேலை செய்யும் இவர் திங்கள்கிழமை பிற்பகல் சிதம்பரம் ஞாயிறுமடத்தெருவில் வசிக்கும் அவரது அண்ணன் பிரபு (30) வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அண்ணன், தம்பி இடையே தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு, கார்த்திகேயன், அண்ணன் பிரபுவின் கூரை வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். முகம் மற்றும் உடலில் காயம் இருந்துள்ளது.
இந்நிலையில் போலீஸாருக்கு தெரியாமல் அவரது உடலை கீழே இறக்கி அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை காலை எடுத்துச் சென்றுள்ளனர். கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார், ஓமக்குளம் அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற சடலத்தை மறித்து, பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, இறந்த வாலிபர் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.