பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு 24 நாள் வசூல் ரூ.1.40 கோடியை நெருங்கியது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு உண்டியல்கள் கடந்த 24 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில்
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 24 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.40 கோடியை நெருங்கியது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு உண்டியல்கள் கடந்த 24 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 39 லட்சத்து 59 ஆயிரத்து 875 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 1,530 கிராமும், வெள்ளி 4 ஆயிரத்து 500 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 759 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஒரேபக்தர் 100பவுன் எடையுள்ள தங்க பிஸ்கட்களை செலுத்தியிருந்தது, அதிக அளவில் அமெரிக்க கரன்சிகள் இருந்தது ஆகியன குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.