பவர் கம்பெனியில் உயர் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இருவர் சாவு: போலீஸார் மீது கல்வீச்சு; இன்ஸ்பெக்டர்கள் காயம்
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஐஎல்எஃப்எஸ் பவர் கம்பெனியில் சனிக்கிழமை 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர்
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஐஎல்எஃப்எஸ் பவர் கம்பெனியில் சனிக்கிழமை 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்திலிருந்து கீழே விழுந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமுற்றார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் ஐஎஸ்எஃப்எஸ் பவர் கம்பெனி கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை கம்பெனியில் 900 அடி உயரமுள்ள சிமினி கோபுரத்தில் கயிறு கட்டிக்கொண்டு உள்புறமாக மராமத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கயிறு அறுந்ததில் மூன்று பேர் 900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாசெளத்திரி மகன் சோனுராஜ் செளத்திரி (26), சலாவுதீன்கான் மகன் முகித்கான் (31) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜியாவுதீன் மகன் வினோத்குமார் (18) என்பவர் கால் துண்டிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸார் மீது கல்வீச்சு, இரு இன்ஸ்பெக்டர்கள் காயம்: இருவர் கீழே விழுந்து இறந்த சம்பவத்தை முன்னிட்டு சம்பவ இடத்திற்கு பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.உதயகுமார், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் விரைந்தனர். அப்போது பவர் கம்பெனியில் பணியாற்று சக ஊழியர்கள் கற்கள் மற்றும் சிமெண்ட் காரைகளால் போலீஸார் மீது வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், கே.உதயகுமார் ஆகியோர் தலையில் காயமுற்ற பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். பின்னர் போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.
தற்போது டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.