30 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிபெருக்கிற்கு கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று தீர்த்தவாரி வழங்குவது
30 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் நடைபெறவுள்ள ஆடிபெருக்கிற்கு சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் தீர்த்தவாரி வழங்க செல்கிறார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று தீர்த்தவாரி வழங்குவது வழக்கமாக இருந்து வந்தது. இதற்காக வல்லம்படுகையில் கோயிலுக்கு வழங்கப்பட்ட 11 ஏக்கர் நிலங்கள், சத்திரம் மற்றும் சுவாமி தங்குவதற்கான நீராழி மண்டபம் உள்ளன. இந்நிகழ்ச்சியை அதற்கான கட்டளைதாரர்கள் நடத்தி வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளினால் இந்த உற்சவம் நடைபெறாமல் நின்று போனது.
இந்நிலையில் இந்த ஆண்டு கட்டளைதாரர்கள் உதவியுடன் மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு அன்று தீர்த்தவாரி உற்சவத்தை நடத்துவது என கோயில் பொதுதீட்சிதர்கள் முயற்சி எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றின் ஓரம் உள்ள பழங்கால நீராழி (தீர்த்தவாரி) மண்டபம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கான ஆகஸ்டு 3-ம் தேதி காலை 6 மணிக்கு நடராஜர் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தியான ஸ்ரீசந்திரசேகரசுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) அஸ்தராஜருடன் சென்று நீராழி மண்டபத்தில் தங்கி பொதுமக்களுக்கு தீர்த்தவாரி காட்சி வழங்குகிறார்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தீர்த்தவாரிக்காக ஸ்ரீநடராஜர், ஸ்ரீதில்லைஅம்மன், தச்சங்குள ஸ்ரீமாரியம்மன் ஆகியோருக்கு பழங்கால மண்டபம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.