2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.
ஜூன் 2:பழநியில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு, நன்றி அறிவிப்பு, மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
ஜூன் 2:பழநியில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு, நன்றி அறிவிப்பு, மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பழனி ஆர்.எப்.ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பழநி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.என். வேணுகோபாலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், திரைப்பட நடிகை விந்தியா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், குமாரசாமி, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், அமைச்சர் விசுவநாதன் பேசுகையில்,‘ 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம், என முதல்வர் அப்போதே ஆருடம் சொன்னார்.
ஆனால் சில ஊடகங்கள், கருத்துகணிப்பு என்ற பெயரில் தவறாக வெளியிட்டனர். கடைசியில், 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளோம். அதற்கு காரணம் தொண்டர்களின் உழைப்பு மற்றும் மூன்றாண்டு மக்களுக்கு செய்துள்ள நற்பணிகள் தான். 2016 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றிபெற்று, புதிய கின்னஸ் சாதனை படைக்கும். அதற்காக தற்போதே நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மேடையில் பேசியமாதிரி, சட்டசபையில் வாய்திறப்பது இல்லை. பேசினால் பதிலடி தரப்படும். என அமைச்சர் பேசினார். நடிகை விந்தியா பேசுகையில்,‘ காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற தேர்தலில் காணாமல் போய்விட்டது.
தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் டிபாசிட் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் மோடி அலையும் இல்லை, டாடி அலையும் இல்லை. லேடி அலைதான், என மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். தற்போது வேலையில்லாமல் உள்ள கருணாநிதி, கச்சத்தீவு பிரச்னை, ஸ்பெக்டரம் ஊழல், போன்றவற்றை என்னுடன் விவாதம் செய்ய தயாரா. குஷ்புக்கு கருணாநிதி சரியாக பயிற்சி தரவில்லை. அதனால் தான் பிரச்சாரத்தில் அவர் சொதப்பினார். தற்போது ஏழைகளின் சிரிப்பில் இறைவனை அல்ல மக்கள் இலைத்தான் காண்கின்றனர். என விந்தியா பேசினார். கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பழநி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சட்டமன்ற தொகுதிசெயலாளர் மகுடீஸ்வரன், நகராட்சி துணைதலைவர் முருகானந்தனம்,மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.