குக்கரில் வைத்து பாலிஷ் செய்து தருவதாக, 5 பவுன் நகை நூதன முறையில் திருட்டு
சிதம்பரம் அருகே மணலூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ரவி. இவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டில் இருந்த போது, புதன்கிழமை அன்று மர்மநபர்கள் இருவர் வீட்டிற்கு வந்து பழைய
சிதம்பரத்தில் குக்கரில் வைத்து நகைகளை பாலிஷ் செய்து தருவதாக, தாலி சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் நூதன முறையில் திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே மணலூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ரவி. இவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டில் இருந்த போது, புதன்கிழமை அன்று மர்மநபர்கள் இருவர் வீட்டிற்கு வந்து பழைய நகைகளை மெருகேற்றி (பாலிஷ்) தருவதாக தெரிவித்துள்ளனர். முதலில் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருள்களை பெற்று வீட்டின் முன்பு வைத்து திரவத்தால் துடைத்து மெருகேற்றி கொடுத்தனர். இதனை நம்பி ரவி 4 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளை மெருகேற்றி தருமாறு கழற்றி கொடுத்துள்ளனர்.
மர்மநபர்கள், ரவியிடம் நகைகளை பெற்று குக்கரில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடியை கலக்கி அதில் நகைகளை போட்டு மூடினர். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால் நகைகள் மெருகேறிவிடும் என கூறினர். அதன்படி குக்கரை அடுப்பில் ரவி குடும்பத்தினர் அடுப்பில் வைத்தனர். இந்நிலையில் மர்மநபர்கள் குக்கர் சூடாகும் வரை பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். சென்ற நபர்கள் திரும்பி வராததால், சந்தேகமடைந்த ரவி குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி திறந்து பார்த்த போது நகைகள் காணாதது கண்டு அதிரிச்சியுற்றார். நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து ரவி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.