சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி டிஜிபி அலுவலகம் முற்றுகை
அபிஷேகப்பாக்கம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை புதுவையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும்
அபிஷேகப்பாக்கம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை புதுவையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தவளக்குப்பம் காவல் நிலையத்துக்குட்பட்ட அபிஷேகப்பாக்கத்தில் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வீரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த மே மாதம் இறுதியில் அவரது பெண் குழந்தைகள் தனியாக இருந்த போது, ரோந்து சென்ற தவளக்குப்பம் போலீஸார் லெனின், சிறுமிகளிடம் தரக்குறைவாக பேசி, பாலியல் தொல்லை தந்துள்ளனர்.இதுகுறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அக்காவலர்கள் மீது துறையில் ரீதியில் நடவடிக்கை எடுப்பது போல் சஸ்பெண்ட் மட்டுமே செய்துள்ளனர்.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் கோகுல் கார்த்திக் தலைமை தாங்கினார். தோழமை சங்க நிர்வாகிகள் வீர.பாரதி, தீனா, போன்ஸ் ரமேஷ், மகேஷ், இருதய ராசு, ர.கோ.மணிமாறன், செல்வம், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.