சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை விரைந்து கட்ட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை விரைந்து கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இடையூறாக இருப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை விரைந்து கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இடையூறாக இருப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் சிதம்பரம் வண்டிகேட் சாய்மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்வளவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன் வரவேற்றார். தலைமை நிலையச் செயலாளர் ஏ.சி.பாவரசு, ஜெ.குளவழகன், சி.வள்ளுவன், தமிழ்க்குமரன், தமிழ்ஒளி, பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, முத்தையன், இளம்வழுதி, சந்தானக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சென்னையில் வருகிற ஜூன் 15-ம் தேதி நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் விருது வழங்கும் விழாவில் கடலூர் தெற்கு மாவட்டத்திலிருந்து திரளானோர் சென்று பங்கேற்பது, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளை மாற்றி, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.