சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூலை 6-8ல் பன்னிரு திருமுறைகள் அரங்கேற்ற மாநாடு: ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில் ஜூலை 6,7.8 தேதிகளில் பன்னிரு திருமுறைகள் உரை அரங்கேற்ற மாநாடு நடைபெறவுள்ளது என தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில் ஜூலை 6,7.8 தேதிகளில் பன்னிரு திருமுறைகள் உரை அரங்கேற்ற மாநாடு நடைபெறவுள்ளது என தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் தெரிவித்தார்.
பன்னிரு திருமுறை அரங்கேற்ற மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கனகசபைநகர் குருஞானசம்பந்தர் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தருமை ஆதீன கட்டளை தம்பிரான் திருச்சி மெளன மட அதிபர் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் தலைமை வகித்து, மாநாடு குறித்து பல்வேறு குழுக்களை நியமித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
சிதம்பரத்தில் சோழ மன்னன் அபநய சோழன் வேண்டுகோளுக்கிணங்க, சேக்கிழார் பெருமான், நடராஜப் பெருமானை வேண்டி உலகெல்லாம் என்ற அசரிரீ சொல்லை முதல் சொல்லாக கொண்டு திருத்தொண்டர் புராணம் என்கிற பெரியபுராணத்தை இயற்றினார். அவர் இயற்றிய பெரியபுராணத்தை, அபநய சோழன் சிதம்பரம் வீதிகளில், சேக்கிழாரையும், பெரியபுராணத்தையும் யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அரங்கேற்றம் செய்தாா்.
தற்போது தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல் முறையாக பன்னிரு திருமுறைகள் 12-க்கும் உரை வெளியிடப்பட்டு வீதிகளில் யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வருகிற ஜூலை 6-ம் தேதி சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் அன்றைய தினம் 'பன்னிரு திருமுறைகள் உரையுடன் 16 பாகங்கள் கொண்ட நூல்கள்', 'திருக்குறள் உரை வளம்', 'சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கு' ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. பின்னர் ஜூலை 7,8 தேதிகளில் பன்னிரு திருமுறைகள் பற்றி ஆய்வரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகின்றன.
இந்த அரங்கேற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் தருமபரம் ஆதீனம் ஸ்ரீசண்முக தேசிக பராமாச்சாரியார், திருவாவடுதுறை ஆதினம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார், மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார், குன்றக்குடி அடிகளார், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என குமாரசாமி தம்பிரான் தெரிவித்தார்.
கூட்டத்தில் நகர பிரமுகர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.எம்.சுவேதகுமார், சக்தி ஆர்.நடராஜன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், குருஞானசம்பந்தர் பள்ளி செயலருமான சேதுசுப்பிரமணியன், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.