முகப்பு
தற்போதைய செய்திகள்

32 லட்சம் மாணவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்.ஆர்.கே நினைவு அறக்கட்டளை டிரஸ்டி எம்.ஆர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

தமிழகத்தில் மது, புகை பழக்கத்தினால் 32 லட்சம் மாணவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்.ஆர்.கே நினைவு அறக்கட்டளை டிரஸ்டி எம்.ஆர்.தெய்வசிகாமணி தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் பி.கதிரவன் முன்னிலை வகித்து பேசினார். முதல்வர் கே.ஆனந்தவேலு வரவேற்றார். பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 9 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதக்கங்களை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அவர் பேசியது: பிளஸ்டூ தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்றவர்களை கல்லூரியில் சேர்த்து, பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் இக்கல்லூரி இடம்பெற்றுள்ளது சரித்திர சாதனையாகும். தமிழகஅளவில் தரவரிசை பட்டியலில் 170வது இடத்தில் இக்கல்லூரி இடம் பெற்றுள்ளது. விரைவில் முதல் 25 இடங்களில் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பா நாடுகள் உலகை ஆண்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்க நாடுகள் உலகை ஆண்டன, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும், சீனாவும் உலகை ஆளும்.

கலாசார சீரழிவிற்கு சினிமாதான் காரணம்: மாணவர்கள் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். இன்றைய சமுதாயத்தில் சமுதாய மற்றும் கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதற்கு சினிமாதான் காரணம். 2 வயதிலிருந்து 20 வயது வரை சினிமா பார்க்காத மாணவர்களின் மூளை நன்றாக இருக்கும். 84 வயதிலும் இதுவரை நான் சினிமா பார்த்ததே இல்லை என்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 84 சதவீத மாணவர்களை குடிப்பதற்கும், புகைப்பதற்கும் என்ன காரணம் என ஆய்வு மேற்கொண்டதில் சினிமாதான் காரணம் என தெரியவந்துள்ளது.

1 லட்சம் விஞ்ஞானிகள் தேவை: 83-ம் ஆண்டு ஏவகனை தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடிக்கு அப்துல்கலாம் ரூ.15 லட்சம் நிதி வழங்கி தொழில்நுட்பத்தை செயல்படுத்த வலியுறுத்தினார். மூன்று ஆண்டுகளில் எனது தலைமையில் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தினோம். இதன் மூலம் இந்தியாவிற்கு 300 கோடி அந்நிய செலவாணி நிதி கிடைத்துள்ளது. நம் நாட்டிலிருந்து 20 லட்சம் விஞ்ஞானிகள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர். நமக்கு தற்போது 5 லட்சம் விஞ்ஞானிகள் தேவை. இப்போது 1 லட்சம் விஞ்ஞானிகளே உள்ளனர். ஆகவே மாணவர்கள் நன்றாக படித்து விஞ்ஞானியாக வர வேண்டும் என டி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

விழாவில் தொழிலதிபர் எம்ஏஎம்.ராமசாமியின் நேர்முக உதவியாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.ஆர்.கே.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.