பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு. 21 நாள் வசூல் ரூ 1.57 கோடியை தாண்டியது
பழனிக்கோயில் உண்டியல்கள் கடந்த 21 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு முதல் நாள் வசூல் ரூ.1.57 கோடியை தாண்டியது.
பழனிக்கோயில் உண்டியல்கள் கடந்த 21 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு முதல் நாள் வசூல் ரூ.1.57 கோடியை தாண்டியது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு கோடைகால விடுமுறை, வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என பல இலட்சம் பேர் வந்து சென்றதால் கடந்த 21 நாட்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்தன.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூ.ஒரு கோடியே 57 இலட்சத்து 53 ஆயிரத்து 700 கிடைத்தது. பணம் தவிர பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமாக பொருட்களை காணிக்கை செலுத்தியிருந்தனர். தங்கம் 850 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 250 கிராமும் வரப்பெற்றிருந்தது.
இவை தவிர மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய யூரோ, ஜப்பான், குவைத் என பல்வேறு நாட்டு நாணயங்களும், வெளிநாட்டு கரன்சிகள் 1,183 ம் வரப்பெற்றது. பல பக்தர்கள் ரிஸ்ட் வாட்ச், நவதானியங்கள், பட்டுச்சேலைகள், பித்தளை பாத்திரங்கள், செல்போன் ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.