சிதம்பரம் அருகே திருடுபோன அம்மன் சிலை மீட்பு!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கானூர் கிராமத்தில் திருடுபோன அம்மன் சிலையை போலீஸார் மீட்டனர். அச்சிலையை திருடிய இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலை திருட்டில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்ற போது சேத்தியாத்தோப்பு கட்டுக்கரைத்தெருவைச் சேர்ந்த முத்து (27) என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கானூர் கிராமத்தில் அம்மன்சிலையை திருடியதாகவும், அச்சிலையை சேத்தியாத்தோப்பு அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் குழாய் அடிப்பகுதியில் மணலில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீஸார் அங்கு சென்று புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலையை மீட்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பிடிபட்ட முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சிலை திருட்டில் கும்பலாக சிலர் ஈடுபட்டுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்து கும்பகோணம் மற்றும் முடிகண்டநல்லூரைச் சேர்ந்த சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட அம்மன் சிலையின் உயரம் இரண்டரை அடி. 23 கிலோ எடை கொண்டது என போலீஸார் தெரிவித்தனர்.