பழனியில் வைகாசி விசாக திருக்கல்யாணம் : இன்று விசாகத் திருத்தேரோட்டம்
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. புதன்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. புதன்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் கடந்த ஜூன் 5ம் தேதி வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, கற்பகவிருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல வாகனங்களில் இரதவீதி எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மாலை 7 மணியளவில் விநாயகர் அனுமதி, வாஸ்துசாந்தி ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ திரவ்ய பூஜை நடத்தப்பட்டு பின் சோடஷ தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கலசங்கள் வைக்கப்பட்டு கலச பூஜை நடத்தப்பட்டு கலசபூஜை, வாத்யபூஜை, பொற்சுன்னம் இடித்தல் ஆகியன நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பச்சை சாத்துப்படி, பட்டு சாத்துபடி நடத்தப்பட்டு சங்கல்பம் நடைபெற்றது. லாஜபூஜை, பிரவாரம் வாசித்தல் ஆகியனவும் நடைபெற்றது. பின்பு மேளதாளம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்ட பின் மஹா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த பின் பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் ஏராளமான சிவாச்சார்யார்கள் நடத்தி வைத்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாள் திருவிழாவாக இன்று (புதன்கிழமை) ஜூன்.11ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகின்றன. விழா நாட்களில் கோவில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, மேலாளர் ரவி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர்.