கொலையுண்டவரின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்: வத்திராயிருப்பில் தொடர்ந்து பதற்றம்; போலீஸ் குவிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாகூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், ஏற்பட்ட கலவரத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீஸார் காயம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர் சடலம் வத்திராயிருப்பு அரசு
தற்போதைய செய்திகள்கொலையுண்டவரின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்: வத்திராயிருப்பில் தொடர்ந்து பதற்றம்; போலீஸ் குவிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாகூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், ஏற்பட்ட கலவரத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீஸார் காயம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர் சடலம் வத்திராயிருப்பு அரசு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், ஏற்பட்ட கலவரத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீஸார் காயம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர் சடலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு தரப்பினர் குவிந்ததையடுத்து கடும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம்:
கூமாப்பட்டி, ராமசாமிபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49). இவர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் கொடுத்துள்ள புகார் மனு விவரம்: இதே இடத்தைச் சேர்ந்த செ.தங்கப்பாண்டி, செ.சந்திரபோஸ் ஆகியோர் மது போதையில் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும், இதனை ராமச்சந்திரன் கண்டித்த போது அவர்கள், இவரை இழி சொற்களால் பேசி கீழே தள்ளிவிட்டதாயும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூமாப்பட்டி, இமானுவேல் தெரு, ராஜேந்திரன் மகன் நாகராஜ் (25) என்பவர் கொடுத்துள்ள புகார் மனு விவரம்: நாகராஜ் தனது ஆட்டோவை ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டு அருகில் நிறுத்தியிருந்தாராம். அப்போது க.நீராத்துலிங்கம், க.தமிழரசன், செ.தங்கப்பாண்டி, சே.பூச்சன் உள்ளிட்ட 17 பேர் அங்கு வந்தார்களாம். வந்தவர்கள் ஆட்டோவில் வைத்து மது குடித்ததாகவும், அதில் ஒருவர் ஆட்டோவில் வாந்தி எடுத்தும் விட்டாராம். இதனையடுத்து நாகராஜ் சத்தம் போட்டதாகவும், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாகராஜை அக்கும்பல் தாக்கியதுடன், ஊராட்சி மன்றத்திற்குச் சொந்தமான குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாம். இதன் பேரில் போலீஸார் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூமாப்பட்டி காவல் நிலைய காவலர் புகார்:
காவலர் ரவி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், அம்பேத்கர் தெரு சுடுகாட்டுப் பாதையில் மாலை ரோந்துப் பணியில் இருந்தேன். அப்போது மேற்படி சம்பவத்திற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்குமார், பஞ்சபாண்டியன் காவலர் மருதுபாண்டி ஆகியோர் பாதுகாப்பு அளிப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது, அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமச்சந்திரன், கடந்த வழக்கில் உள்ள 17 பேர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டு, சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். தடுக்க வந்த தன்னையும் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காயம் அடைந்த போலீஸார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமச்சந்திரன் புகார்: அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மா.ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற போது, தனது மகன் பாலமுருகன் (38) என்பவரை பொதுமக்கள் முன்னிலையில் அடையாளம் தெரிந்த கூமாப்பட்டி காவல் நிலைய காவலர்கள் தாக்கினார்கள். இதில் தனது மகன் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் சார்பு ஆய்வாளர் புகார்: கூமாப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா, அம்பேத்கர் தெரு அருகே கலவரம் நடப்பதாக தகவல் அறிந்து அரசு வாகனத்தில் சென்ற போது, அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் 30 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து இத்துடன் செத்துப் போ என்று கூறி கல், கம்பால் தாக்கி காயப்படுத்தினார்கள். மேலும் அரசு வாகனத்தையும் சேதப்படுத்தினர் என குறிப்பிட்டுள்ளார். இதன் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே பாலமுருகனின் உடல் வைக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் திரண்டனர். இதனால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு அப் பகுதியில் போடப்பட்டிருந்தது.
இவர்கள் உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தாக்குதல் நடத்திய காவலர்கள் தலித் இல்லாதவர்களாய் இருந்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, சிவகாசி கோட்டாட்சியர் மணிவண்ணன் உள்ளிட்டோர் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மாலை வரை உடன்பாடு ஏற்படவில்லை.
மாலை மதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவர் நடராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் காளிராஜ், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையின் மருத்துவர் பால்சாமி உள்ளிட்ட 5 மருத்துவர் கொண்டு குழுவினர் பாலமுருகனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இது முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்ற நீதிபதி பத்மா, பாலமுருகனின் சடலத்தைப் பார்வையிட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில், கோரிக்கைகளை ஏற்காவிட்டால் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து பிரச்னையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதால் இப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
கூமாப்பட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.