திமுகவில் 25 ஆண்டுகளாக ஒன்றிய செயலராக இருந்தவர் இடைநீக்கம்
திமுக தலைமை தமிழகம் முழுவதும் 3 மாவட்ட செயலர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் 33 பேரை சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. 33 பேரில் கடலூர் ஒன்றிய செயலர் ஜெயபால் பெயரும் உள்ளது.
கடலூர் ஒன்றிய திமுக செயலர் பொறுப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் இடைநீக்கம்
திமுக தலைமை தமிழகம் முழுவதும் 3 மாவட்ட செயலர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் 33 பேரை சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. 33 பேரில் கடலூர் ஒன்றிய செயலர் ஜெயபால் பெயரும் உள்ளது.அவர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, கட்சியினர் சிலரிடம் கேட்டபோது, கடலூர் அருகே குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் ஒன்றிய செயலராக உள்ளார். வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள கடலூர் ஒன்றியத்தில், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த இவர் ஒன்றிய செயலராக இருந்தார். மாவட்ட செயலர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தை அனுசரித்து சென்றதால், தொடர்ந்து பதவியில் இருக்க முடிந்தது.
கடந்த ஆண்டு நடந்த கிளை கழக தேர்தலில் கடலூர் ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்த கிளைகளில் 111 கிளை அமைப்புகளை மீண்டும் பதிவு செய்யவி்ல்லை என்றும், மொத்தமுள்ள 58 ஊராட்சிகளில் 8 ஊராட்சிகளில் ஊராட்சி கழக செயலர் தேர்தல் நடத்தவில்லை என்றும் இவர் மீது கட்சி தலைமைக்கு புகார் அனுப்பபட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் செலவுக்கு கிளை கழகங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை, அவர் உரியவர்களுக்கு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தன்னுடைய ஆதரவாளர் என்பதால், மாவட்ட செயலர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கட்சி அமைப்பை வலுப்படுத்த திமுக தலைமையால் அண்மையில் அமைக்கப்பட்ட 6 பேர் குழுவிடம், எம்ஆர்கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உள்ள அணியினர் இந்த புகார்களை தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பியதால் கட்சி தலைமை ஜெயபாலை இடைநீக்கம் செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள ஒன்றிய செயலர்களில் பலர், மாவட்ட செயலர் என்னும் குறுநில மன்னரின் ஏவலாளிகளாக மட்டுமே உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் ஜமீன்தார்கள் போல் நடந்துகொள்வதாகவும், அத்தகைய ஒன்றிய செயலர்களை மாற்ற வேண்டும் எனவும் புகார் அனுப்பியுள்ளோம். இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.