பாபநாசம் அணையில் 400 கனஅடி தண்ணீர் திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம்
குடிநீர் தேவைக்காக அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு்ள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71.52 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 65.50 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 547 கனஅடியும், மணிமுத்தாறு, அடவிநயினார் அணைகளுக்கு விநாடிக்கு தலா 2 கனஅடியும், கடனாநதி, ராமநதி அணைகளுக்கு தலா 10 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 8 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. குண்டாறு அணையில் மட்டும் 4 மி.மீ மழை பெய்துள்ளது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 200 கனஅடி திறக்கப்பட்டு வந்தது. கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்கிட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை கூடுதலாக 100 கனஅடி திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.