பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அகற்றகோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
கடலூர், கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் 10
பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் மாணவர்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
கடலூர், கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடற்கரை சாலை வழியாகத்தான் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் மாணவிகள் பள்ளி விட்டு செல்லும்போது, குடித்து விட்டு சிலர் அடாவடியில் ஈடுபடுவதால், மாணவிகள் அச்சத்துடன் கடந்து வேண்டிய நிலை உள்ளது.
மேலும் இந்த கடை எதிரில் உள்ள பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம் திறந்தவெளி பாராக மாறி உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டி.அரசன் கூறுகையில், இந்த கடை திறந்த பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்து மாணவிகள் செல்ல முடியவில்லை. அதிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவிகள், சிறப்பு வகுப்புகள் முடிந்த பின்னர் மாலை வீடு திரும்ப நேரமாகி விடுகிறது. போதை ஆசாமிகளின் அடாவடியால் 6 மணிக்கு மேல் மாணவிகள் இப்பகுதி வழியாக செல்ல பயப்படுகின்றனர்.
Advertisement
குடியிருப்பு பகுதி, பள்ளிகள், வழிபாட்டுதலங்கள் உள்ள இடங்களில் மதுக்கடை இருக்க கூடாது என்று அரசின் உத்தரவு உள்ளது. எனவே இந்த கடையை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.