காவலர் சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கோரிக்கை
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் காவலர் தெய்வக்குமார் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் காவலர் தெய்வக்குமார் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அளித்துள்ளார்.
கடிததத்தில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வக்குமார் கடலூர் மாவட்ட ஆயதப்படைக்காவலராக உள்ளார். இவர் கடந்த 11-2-2014 அன்று காலை தலையில் பலத்த காயத்துடன், காது அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை மற்றும் உடலில் உள்ள காயங்கள் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் கருதுகின்றனர். ஆனால் காவல்துறை சந்தேக மரணம் (174 (4)) என வழக்குப் பதிவு செய்துள்ளது. பல தரப்பு மக்களும் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்து 15 தினங்களாகியும் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதும், அதன் மீதான புலன் விசாரணையில் தாமதம் ஏற்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே பிரதே பரிசோதனை அடிப்படையில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முன்னேற்றமில்லாத நிலையில் வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றம் செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.