முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைந்ததற்கு வாசன்தான் காரணம்: முன்னாள் சேவாதள மாநில அமைப்பாளர் புகார்
ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்அதிமுக கட்சியில் இணைந்ததற்கு வாசனின் சதிச் செயலேதான் காரணம். அவர்கள் மூவரும் மூப்பனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என
ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிமுக கட்சியில் இணைந்ததற்கு வாசனின் சதிச் செயலேதான் காரணம். அவர்கள் மூவரும் மூப்பனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள பிரிவு முன்னாள் மாநில அமைப்பாளர் எம்.என்.விஜயசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சிதம்பரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காமராஜருக்கு பிறகு ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் தலைவர்களாக உருவெடுத்து, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்பு கொடுத்து பாகுபாடற்ற நிலையில் கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு ஜி.கே.வாசன் 2001-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, இந்திய தேசிய காங்கிரஸோடு இணைத்து கொண்டார். அவரால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மூத்த தலைவர்கள் ராமசாமிபடையாச்சியார், மாணிக்கவேலு நாயக்கர், வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.பி.சுப்பிரமணியம், திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரிஅனந்தன் ஆகியோர் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.
ஆனால் ஜி.கே.வாசன் கட்சி வளர்ச்சிக்கு ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாமல் மாநில காங்கிரஸ் தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளராக, மத்திய அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போது மத்தியஅரசையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் ஆகியோர்களுக்கு எதிரான கருத்துகளையும், இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்தும் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி பிரச்சனை, சோதனை வரும்போதெல்லாம், மூப்பனார் குடும்பம் கட்சியை சீண்டி பார்க்கிறது.
1966-ல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கி, கருணாநிதியோடு கைகோர்த்து பதவியை அனுபவித்தார். அதுபோல் தற்போது வாசன், ஜெயலலிதாவோடு கைகோர்க்க தயாராகிவிட்டார். அதற்காக தம்முடைய ஆதரவாளர்கள் மூன்று முன்னாள் எம்எல்ஏக்களை அதிமுகவில் இணைய சொல்லிவிட்டு, தாமும் இணைந்து கொள்வதுதான் ஜி.கே.வாசனின் திட்டமாகும். பிறகு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். மிக சொற்ப அளவிலான மூப்பானர் சமுதாயத்தினரை எம்பி, எம்எல்ஏக்களாக உருவாக்கவதில் தீவிரம் காட்டி வருகிறார் என எம்.என்.விஜயசுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.