முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் வேலி மைனாக்கள்

பழனி பெரியப்பாநகரில் நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் புதிதாக வந்துள்ள வேலிமைனாக் கூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

பழனி பெரியப்பாநகரில் நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் புதிதாக வந்துள்ள வேலிமைனாக் கூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு உயிரினம் மறையும் பட்சத்தில் உணவுச்சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அறிவியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இதற்கு உதாரணமாக சமீப காலமாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதை அவர்கள் சொல்கின்றனர்.  இதைத் தொடர்ந்து சமீபகாலமாக பலரும் மேற்கொள்ளும் அரியமுயற்சிகள் காரணமாக மீண்டும் சிட்டுக்குருவிகள் ஆங்காங்கு காணப்படுகிறது.  அதே போல பறவைகளால் மனிதர்களுக்கு பல நன்மைகள் மறைமுகமாக ஏற்படுகின்றன.  பழனி நகரின் வடக்குப்பகுதியில் உள்ளது பெரியப்பா நகர்.  இங்கு நகராட்சியின் உரக்கிடங்கு உள்ளது.  இங்கு தினமும் ஏராளமான லாரிகள், டிராக்டரில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.  திருவிழாக்காலங்கள், முகூர்த்த நாட்களில் இங்கு வரும் குப்பைகளும் ஏராளம்.  மழை காலங்களில் இக்குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் இப்பகுதி மக்கள் படும் பாடு அளவில்லாதது. 

அதே போல இப்பகுதியில் கொசுக்கள், ஈக்களால் ஏற்படும் தொந்தரவுகளும் அளவில்லாதது.  இதனால் இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி குப்பைலாரிகளை சிறைப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  நகராட்சி நிர்வாகமும் அவ்வப்போது இப்பகுதியில் மேற்கொள்ளும் மாஸ்கிளீனிங் இங்கு உள்ள பிரச்னைக்கு தீர்வாக இல்லை.  கடந்த சில மாதங்களாக இங்கு மிக பெரிய அளவிலான கொசுக்கள், மஞ்சள் நிற கொசுக்களால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.  தொடர்ந்து வீடுகள் தோறும் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்து வீட்டைத் திறக்கவே அப்பகுதியில் அஞ்சி வந்தனர். 

ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஈக்களால் பெண்கள் சொல்லொனா துயரடைந்தனர்.  இந்நிலையில் அப்பகுதியில் திடீரென இவற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.  நகராட்சி நடவடிக்கை எடுக்காத நிலையிலும் இந்த மாற்றம் எப்படி என மக்கள் திகைத்த நிலையில் உரக்கிடங்கு பகுதியில் வந்த வேலிமைனாக்களாலேயே இந்த மாற்றம் என்பதை விரைவாக உணர்ந்தனர்.  குருவிக்கும் சேராமல் மைனாவுக்கும் சேராமல் கூட்டம், கூட்டமாக வந்த இந்த பறவைகள் காலை மற்றும் மாலை உரக்கிடங்கில் உள்ள குப்பைகள், மின்கம்பங்களில் அமர்ந்திருப்பதை காணமுடிகிறது. 

இவை கூட்டமாக பறக்கும் போதே பறந்து கொண்டிருக்கும் ஈக்கள், பூச்சிகளை பிடித்து உணவாக உண்டு விடுகிறது.  தவிர உரக்கிடங்கில் உள்ள குப்பைகளை கிளறி அதில் முட்டையில் இருந்து பூச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் ஈக்கள், கொசுக்களையும் சாப்பிட்டு விடுகின்றன.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பத்திர எழுத்தர் கணேசன் என்பவர் கூறுகையில், இந்த பறவையினம் பற்றி தெரியவில்லை.  ஆனால் இவை வந்ததில் இருந்து கொசு, ஈக்கள் பெருமளவு குறைந்துள்ளது.  இவை பறந்தவண்ணமே அவற்றை பிடிக்கின்றன.  நகராட்சிக்கு உதவியாக இவை சுகாதாரப்பணிகளை செய்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கிறது. காலை, மாலையில் பறக்கும் இவை மதியம், இரவு நேரங்களில் அருகே உள்ள சிறுமரங்களில் தங்கிவிடுகிறது. 

இவற்றை வேலிமைனா என்று சிலர் தெரிவித்துள்ளனர்.  பொதுமக்கள் நண்பனாக விளங்கும் இவற்றை நரிக்குறவர் மற்றும் சிறுவர்கள் என பலரும் வந்து கொத்து, கொத்தாக வலை விரித்தும், சுட்டும் உணவுக்காக கொண்டு செல்கின்றனர்.  பார்ப்பதற்கே மனக்கஷ்டமாக உள்ளது.  சிட்டுக்குருவி போல இதையும் அழித்தால் மீண்டும் ஊரில் கொசு, ஈ தொல்லை ஏற்பட்டு விடும்.  இதை எப்படி தவிர்ப்பது என தெரியவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.