முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிகாரிகள் நெருக்கடியால் துப்புரவு பணியாளர் தற்கொலை: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்து ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் புதன்கிழமை திருநெல்வேலியில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மாநகராட்சி அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்து ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் புதன்கிழமை திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை நேசநயினார் தெருவை சேர்ந்த வேலு மகன் ஆறுமுகம் (44). இவர் தச்சநல்லூர் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் துப்புரவு பணியாளராக பணி செய்து வந்தார். ஆறுமுகம் மாநகராட்சி மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர், எடை எழுதும் பணியாளர் ஆகியோரின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தாராம்.

இதனிடையே ஆதிதமிழர் பேரவை அமைப்பினர், தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகம் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் அமைப்பின் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆதிதமிழர் பேரவையின் மாவட்டச் செயலர் கு. கலைக்கண்ணன் தெரிவித்ததாவது: மாநகராட்சியில் பணி செய்து வரும் துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும், அவர்களின் குறைகள் குறித்து ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியரிடம் பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளின் நெருக்கடி காரணமான மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்வதாக ஆறுமுகம் கடிதம் எழுதி வைத்துள்ளார். ஆறுமுகம் சாவுக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். ஆறுமுகம் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆறுமுகம் குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகை அளிக்க வேண்டும். மாநகராட்சியில் பாதிக்கப்படும் துப்புரவு பணியாளர்கள் நிலை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

அவர்களிடம் பாளையங்கோட்டை வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் மாதவன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →