போராட்டத்தைக் கைவிட்டவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. கோரிக்கை
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்று, போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மீது போலீஸார் திடீர்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்று, போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மீது போலீஸார் திடீர் தாக்குதல் நடத்தினர்.
நாகையை அடுத்த வேளாங்கண்ணியிலிருந்த நடைபாதை கடைகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பேராலய நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டது. அப்புறப்படுத்தப்பட்ட நடைபாதை கடைகளுக்கு பதிலாக நிரந்தர கடை அமைத்துத் தரப்படும் எனவும், இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் எனவும் அப்போது, பேராலய நிர்வாகம் சார்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.நடைபாதை கடை உரிமையாளர்களுக்குப் பேராலய நிர்வாகம் சார்பில் ஒரே மதிப்பில் நிவாரணத் தொகை வழங்காமல், மாறுபட்ட தொகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேராலய நிர்வாகம் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு ஒரே மதிப்பிலான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, கடைகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த சனிக்கிழமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி. செல்வம் தலைமையில், நடைபாதை வியாபாரிகள் மறியலில் ஈடுபட குழுமியிருந்தனர். இது குறித்துத் தகவலறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் விஜயா, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தேர்தல் முடிந்த பின்னர், பேராலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வுக் காணப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்தத் தீர்வை ஏற்பதாக அறிவித்த போராட்டக் குழுவினர் அங்கிருந்து, கலைந்து செல்ல முயன்றனர்.அப்போது, அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்லமுத்து, போராட்டக் குழுவினரை வழிமறித்து கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். போராட்டம் நடத்தும் முன்பாகவே அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையெனில், போராட்டம் நடத்தி கைதாக தயாராக இருக்கிறோம் என போராட்டக் குழுவினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அப்போது, போலீஸாரை கடுமையாகக் கண்டித்த காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்லமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி. செல்வத்தை பிடித்து இழுத்துத் தள்ளி, தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென போலீஸார் சிலர், போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பெண் ஒருவரும் தாக்கப்பட்டார்.
பின்னர், பெண்கள் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்து, சமுதாயக் கூடத்தில் அடைத்தனர். அங்கு, போராட்டக் குழுவினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட மறுத்ததையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு 15 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இருக்கும் போது, அவர்களிடம் எந்தத் தகவலும் கேட்டறியாமல், திடீரென வந்து போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளரின் நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் நாகையில் பெரியளவிலான போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி. செல்வம் தெரிவித்தார்.